லாஸ்பேட்டை பயிற்சி மையத்தில் விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாம்
லாஸ்பேட்டை பயிற்சி மையத்தில் விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாம்
ADDED : செப் 17, 2026 05:34 PM
புதுச்சேரி: இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் லாஸ்பேட்டை பயிற்சி மையத்தில், விளையாட்டு வீரர்கள் தேர்வு முகாம் நடக்கிறது.
இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி மைய பொறுப்பாளர் ராஜேஷ் செய்திக்குறிப்பு:
இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் லாஸ்பேட்டை பயிற்சி மையத்தில் 2026–27ம் ஆண்டு தங்கி பயிற்சி பெறும் திட்டத்தில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு, பளு துாக்குதல், கையுந்து பந்து, கோ கோ, கபடி பிரிவுகளில் விளையாடும் ஆண்களுக்கு நாளை (19ம் தேதி) மற்றும் 20ம் தேதி நடக்கிறது.
முகாமில் பங்குபெற தேசிய, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்க வேண்டும். 12 வயது முதல் 18 வயது வரை தனிநபர் விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், அந்த குறிப்பிட்ட தனிநபர் விளையாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, வயது சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை நடத்தி சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வி மாவட்ட போட்டிகளிலோ, அல்லது மத்திய அரசின் கேந்திரிய நவோதயா பள்ளிகளுக்கிடையே நடந்த தனி நபர் போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்த 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் வயது, மருத்துவ பரிசோதனைக்குப்பின் சேர்க்கைக்கு தகுதி பெறுவர்.
மாவட்ட, தேசிய அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடந்த குழுவிளையாட்டு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு உடற்தகுதி சோதனைகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்கள் பயிற்சி விடுதி சேர்க்கைக்கு கருத்தில் கொள்ளப்படுவார்கள்.
உயரமான மாணவர்கள் கையுந்து பந்து விளையாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவார்கள். இவர்கள் சேர்க்கைக்கு முன், மூன்று வாரங்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டும். 14 வயது மாணவர்கள் 170 செ.மீ., உயரம், 16 வயது மாணவர்கள் 180 செ.மீ., 16 வயதிற்கு மேல் 190 செ.மீ., அதற்கும் அதிகமாக உயரமாக இருக்க வேண்டும்.
சேர்க்கைக்கு பின் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லுாரி படிப்பினை, விடுதியில் இருந்து தொடரலாம். விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவருக்கு தினசரி உணவு வகைக்காக ஒரு நாளை ரூ.300, ஒரு ஆண்டிற்கு, விளையாட்டு சீருடை உபகரணங்களுக்கு ரூ,5 ஆயிரம், போட்டி வெளிப்பாட்டிற்கு ரூ.3,500, மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு செலவினங்களுக்கு ரூ.8 ஆயிரம் வரை செலவிடப்படும்.
சேர்க்கைகான விண்ணப்பபடிவங்கள் தேர்வு நாள் அன்று காலை 6:00 மணிக்கு சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மூலம் வழங்கப்படும். தேர்வில் கலந்து கொள்ள வரும் விளையாட்டு வீரர்கள், மூன்று புகைப்படம், பிறப்பு சான்றிதழின் அசல் மற்றும் நகல், இருப்பிட சான்றிதழ், கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ்களுடன் அரசு மருத்துவரால் அளிக்கப்பட்ட உடற்தகுதி சான்றிதழுடன் வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
