/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவிலான திறன் போட்டிகள் துவக்கம்
/
மாநில அளவிலான திறன் போட்டிகள் துவக்கம்
ADDED : மார் 12, 2024 05:56 AM

புதுச்சேரி: சர்வதேச திறன் போட்டிக்கு, இந்திய அளவில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் மாநில அளவிலான திறன் போட்டிகள் புதுச்சேரியில் நேற்று துவங்கியது.
இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் வீதமாக, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு நிகராக, சர்வதேச அளவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேசத் திறன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், 158 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 65 திறன் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கான சர்வதேசத் திறன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. இதில், இந்திய அளவில் பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலானப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதற்காக, தேசிய இணையதளத்தில் புதுச்சேரி மாநில அளவில் திறன் போட்டியில் பங்கேற்பதற்கு பதிவு செய்த மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் புதுச்சேரி திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதன்படி, தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அவர்களின் திறன் பிரிவு சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்லுாரிகளில் குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு மாநில அளவிலான பேக்கரி, ஹோட்டல் ரிசப்ஷன், வெப் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி மற்றும் ரினியூவபிள் எனர்ஜி ஆகிய திறன் பிரிவுகளில் திறன் போட்டிகள் நேற்று (11ம் தேதி) துவங்கியது.
திறன் போட்டிகளை புதுச்சேரி திறன் மேம்பாட்டு கழக இயக்குனர் சரவணன் துவக்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம், வம்பாகீரப்பாளையம் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், முருங்கப்பாக்கம் ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பக் கல்லுாரியில் வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் இந்திய அளவிலான திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர்.

