தெருநாய்கள் விஷம் வைத்து கொலை: வில்லியனுாரில் சோகம்
தெருநாய்கள் விஷம் வைத்து கொலை: வில்லியனுாரில் சோகம்
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 09:45 PM
புதுச்சேரி: வில்லியனுார் அருகே விஷம் வைத்து 4 தெருநாய்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார், மணவெளி வி.ஐ.பி., நகரில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக இறந்து வந்தது. நேற்று காலை திடீரென 4 நாய்கள் சுருண்டு விழுந்து இறந்தது. மேலும் 4 நாய்கள் இறக்கும் நிலையில் சுருண்டு கிடந்தன. தெரு நாய்கள் திடீர் திடீரென மர்மமான முறையில் இறப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வளர்த்து வரும் கால்நடைகளை, தெரு நாய்கள் துரத்தி, துரத்தி அடித்து வந்ததாகவும், அதனால் விஷம் வைத்து தெருநாய்களை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த மர்ம நபர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வில்லியனுார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
