ADDED : ஆக 28, 2026 11:31 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு பெய்த கனமழையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பகலில் வீட்டில் முடங்கிய பொதுமக்கள், மாலை நேரத்தில் நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்க சென்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து குளிர் காற்று வீசி, நகரப்பகுதியில் கனமழை பெய்தது. 1 மணி நேரம் நீடித்த மழையால் அண்ணா சாலை, நேரு வீதி, கோரிமேடு சாலை, சாரம், இ.சி.ஆர்., உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நின்ற பின், இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம் சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திடீர் மழையால் உஷ்ணம் தணிந்து மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
