வியக்க வைக்கும் இராதேவின் கொழுக்கட்டை உலகம்: பாடித் திளைக்கும் மழலைகள்
வியக்க வைக்கும் இராதேவின் கொழுக்கட்டை உலகம்: பாடித் திளைக்கும் மழலைகள்
ADDED : நவ 07, 2026 04:09 PM

குழந்தைகளின் மனம் என்பது ஒரு சுத்தமான கண்ணாடி. அதில் எதை விதைக்கிறோமோ, அதுவே பின்னாளில் விருட்சமாக வளரும். அந்த மழலை மனங்களில் அறிவியலையும் அறத்தையும் வண்ண வண்ணப் பாடல்களாய் விதைத்து வருகிறார் பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற உதவிப் பொறியாளர் தேவதாசு.
பொறிஞர் இராதே என்ற புனைபெயரில் இவர் படைத்து வரும் சிறார் இலக்கியங்கள், இன்றைய டிஜிட்டல் உலகக் குழந்தைகளைக் கூட கவிதையின் பக்கம் ஈர்த்து வியக்க வைக்கின்றன.
பொறிஞர் இராதேவின் முதல் படைப்பான கொஞ்சம் விருந்து கொஞ்சம் மருந்து, சாதாரணமானதல்ல. நம் சமையலறைக் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களுக்குப் பின்னால் இருக்கும் மருத்துவ மற்றும் அறிவியல் உண்மைகளைச் சொல்லும் நுாறு பாடல்களின் பொக்கிஷம் இது.
கண்கவரும் வண்ணங்களில் வெளிவந்த இந்தப் புத்தகம், குழந்தைகளுக்கு உணவுப் பழக்கத்தின் அவசியத்தை நயமாகச் சொன்னது. அதைத்தொடர்ந்து அவர் எழுதிய இரண்டாவது இன்னுத்து தான் கொழுக்கட்டை. குழந்தைகள் இயல்பாகவே ரசிக்கும்படியும், உள்ளத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் விதமாகவும் 36 தலைப்புகளில் இந்தப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் என இயற்கை உலகை எளிய சந்தத்தில், குழந்தைகள் முணுமுணுக்கும் படியாய் வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.
அழிந்துவரும் பூச்சியினங்கள் குறித்த விழிப்புணர்வை மழலைகளுக்குக் கடத்துகிறது இந்நுால். கரப்பான்பூச்சிக்கு வெள்ளை நிற ரத்தம் உண்டு என்பதையும், அணுகுண்டால் கூட அது சாகாது என்ற ஆச்சரியத் தகவலையும் பாடல்கள் வழியே அழகாகக் கடத்தியுள்ளார்.
பூரான், மண்புழு, மூட்டைப்பூச்சி பற்றிய தகவல்களுடன், மின்மினிப் பூச்சி எப்படி ஒளிர்கிறது என்பதன் பின்னால் உள்ள அறிவியலையும் பாட்டாக வடித்துள்ளார்.
இந்த நுாலைப் படித்த பலருக்கும் ஒரு சிந்தனை தோன்றும்; இதை அப்படியே நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? இந்த யோசனையைச் செயலில் காட்டியுள்ளார். தனது அதிநவீன தொழில்நுட்பத் திறமையால், இந்தப் பாடல்களை அசத்தும் செயற்கை நுண்ணறிவுக் காணொளிப் பாடல்களாக மெருகேற்றியுள்ளார்.
இதன் மூலம் விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சியினங்களை நேரில் காண்பது போன்றதொரு பிரமிப்பை மழலைகளுக்குத் தந்துள்ளனர்.
அழகிய வண்ணக் காட்சிகள், இசை, சந்தம், குழந்தைகளைக் குதுகலப்படுத்தும் அனிமேஷன் என இந்தக் காணொளிகள் குழந்தைகளிடம் சக்கைப்போடு போட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் திரையிடப்பட்ட இந்தக் காணொலியைக் கண்டு களித்துத் தங்களின் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்பாடல்களின் மற்றொரு பெரும் சிறப்பு - தமிழ்ச் சொற்களைக் கற்றல். வழக்கொழிந்து வரும் பல அருமையான தமிழ் சொற்கள் மீண்டும் புழக்கத்திற்கு வருவதால், நம் மொழிச் சொற்கள் அழியாமல் மீட்கப்படுகின்றன.
ஆலவள்ளியப்பா, கவிஞர் பாரதி வரிசையில், குழந்தைகள் எவ்விதச் சுமையுமின்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல்கள், இன்றைய தலைமுறைக்குக் கிடைத்த பொக்கிஷம்.
கொல்லாமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மொழிப் பற்று ஆகியவற்றைச் சிறார்களின் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிக்கும் இந்நூலும், அதன் காணொலி வடிவமும் தமிழ்ச் சிறார் இலக்கிய உலகத்தில் ஒரு புதிய மைல்கல் என்பதில் ஐயமில்லை...
உங்க குழந்தைகளை கதை பாடலிலில் அழைத்து செல்ல..https://www.youtube.com/playlist?list=PLdHT8NPmoGco என்ற யூடியூப் முகவரிக்கு நுழையுங்கள்
