ADDED : செப் 24, 2026 07:22 PM
பாகூர்: வழக்கறிஞருக்கு மிரட்டல் விடுத்ததாக, தமிழக போலீஸ் ஏட்டு மீது, பாகூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பாகூர் பகுதியை சேர்ந்த அங்கப்பன் கவி, 28. என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இது தொடர்பாக, அவரது நண்பரான பாகூரை சேர்ந்த வசந்த் என்பவரை, கடந்த 17ம் தேதி, தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் பாகூர் போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், அங்கப்பன் கவி காணாமல் போன சம்பவம் குறித்து விசாரித்தாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, வசந்த், பாகூரை சேர்ந்த வழக்கறிஞர் முகிலரசன் 34; என்பவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கறிஞர் முகிலரசன், அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், முகிலரசன் இணைப்பை துண்டித்து விட்டார்.
பின், முகிலரசனை தொடர்பு கொண்ட அந்த நபர், தான் பிரம்மதேசம் காவல் நிலைய காவலர் என்றும், நீதிமன்ற பணியாற்றி வருவதாகவும், காணாமல் போன அங்கப்பன் கவி என்பவரிடன் உறவினர் என்றும் கூறினார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த காவலர், கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
பின், முகிலரசன் விசாரித்த போது, அந்த நபர் காவலர் அன்புமணி என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கறிஞர் முகிலரசன், அளித்த புகாரின் பேரில், காவலர் அன்புமணி மீது பாகூர் பாகூர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
