UPDATED : அக் 09, 2026 08:09 PM
ADDED : அக் 09, 2026 08:07 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலில் நோட்டா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த தட்டாஞ்சாவடி சட்டசபை பொதுத் தேர்தலின் போது, தொகுதி மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற ரங்கசாமி 10,024 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து நேயம் மக்கள் கழகத்தைச் சேர்ந்த விநாயகம் 5,583, சுயேச்சை வேட்பாளரான சேதுசெல்வம் 3,984, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 2,990 ஓட்டுகளை பெற்றனர்,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்குமாரி 534 ஓட்டுகளையும் பெற்றிருந்தனர். அந்தத் தேர்தலில் நோட்டாவிற்கு 196 ஓட்டுகள் விழுந்து, ஆறாவது இடத்தையே பிடித்திருந்தது.
ஆனால், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. என்.ஆர்.காங்., – காங்., தி.மு.க., இந்திய கம்யூ., ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக, வாக்காளர்கள் நோட்டாவிற்கு தங்களது ஆதரவை அதிக அளவில் பதிவு செய்துள்ளனர்.
இம்முறை 225 ஓட்டுகளை பெற்ற நோட்டா, பிற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் 534 ஓட்டுகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திக்குமாரி, இம்முறை 172 ஓட்டுகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி பெற்ற ஓட்டுகளை விட, நோட்டாவிற்கு விழுந்த ஓட்டுகள் அதிக ஓட்டுகள் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது வாக்காளர்களுக்கு ஏற்படும் அதிருப்தியையே நோட்டாவின் இந்த வளர்ச்சி காட்டுகிறது.
