ADDED : ஆக 18, 2026 03:52 AM

புதுச்சேரி: அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் பெண் பேராசிரியர்கள், நேற்று முதல் இரவு நேர போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
புதுச்சேரி அரசு வெளியிட் டுள்ள பேராசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய நிலுவை தொகைக்கு எதிரான, புதிய அரசாணையை திரும்ப பெற வேண்டும், துணைப் பேராசிரியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், இணைப் பேராசிரியர் தகுதி பெற்றவர்களை, 2017ம் ஆண்டு முதலே, இணைப் பேராசிரியர் என்று பதவி உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ம் தேதி முதல் புதுச்சேரியின் நான்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசு கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களும் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், கல்லூரி முதல்வர்களுக்கு விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை கண்டித்து, நேற்று மாலை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் ஒன்று கூடி, அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து, பெண் பேராசிரியர்கள் தாகூர் கல்லூரி வளாகத்தில் நேற்று இரவு முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
