/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 'தினமலர்' மெகா கோலப்போட்டி திருவிழா... 'களை கட்டியது'; ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் குவிந்தனர்
/
புதுச்சேரியில் 'தினமலர்' மெகா கோலப்போட்டி திருவிழா... 'களை கட்டியது'; ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் குவிந்தனர்
புதுச்சேரியில் 'தினமலர்' மெகா கோலப்போட்டி திருவிழா... 'களை கட்டியது'; ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் குவிந்தனர்
புதுச்சேரியில் 'தினமலர்' மெகா கோலப்போட்டி திருவிழா... 'களை கட்டியது'; ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் குவிந்தனர்
ADDED : டிச 30, 2024 06:39 AM

குளிர் காற்று
காலை 6:00 மணிக்கு போட்டி துவங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 4:00 மணிக்கே மகளிர்கள் அணி அணியாக அலைகளுக்கு இணையாக குடும்பத்துடன் குவிய துவங்கினர்.அனைவரது முன்பதிவு கூப்பன்களும் சரிபார்க்கப்பட்டு, சிக்கு கோலம், ரங்கோலி, டிசைன் கோலம் என அவரவர் போட்டி பிரிவுகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.
கடற்கரைசாலையில் பெண்கள் கோலமிடும் வகையில், ஜில்லென பனியை தெளித்து கொண்டு இருக்க, வண்ண கோலப்பொடிகளை கோலமிடும் இடத்தில் பரப்பி கோலமிட தயாராகினர்.வங்க கடலின் அலை தாலாட்டுக்கு இடையில், சில்லென்று பனிக்காற்று ஆதிக்கம் செலுத்த, காலையில் 6.15 மணிக்கு கோலப் போட்டி கவுண்ட் டவுனுடன் ஆரம்பித்தது.
கண்கள் விரிந்தன
கோலப்போட்டி துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் சரசரவென்று தங்கள் கைவண்ணத்தை காட்ட துவங்கினர். விரல்களில் இருந்து துளி துளியாக சறுக்கிய கோலப்பொடிகள், புள்ளிகளாக, கோடுகளாக, வளையங்களாக சரசரவென தரையை முத்தமிட்டன.விழுந்து ஒவ்வொரு கோலத்துளியும், கொஞ்சம் கொஞ்சமாக கோலத்திற்கு அழகு வடிவங்களை கொடுக்க துவங்கின. கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 4க்கு 4 அடிக்குள் விதவிதமான கோலங்கள் போட்டு, காணும் கண்களை விரிய வைத்தனர்.
அழகோவியங்கள்
இப்படியெல்லாம் கோலம் போட முடியுமா என கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் நுட்பமான வேலைபாடுகளாலும், கோலங்கள் மின்னின.
அதிகாலையில் கதிரவன் கண் விழித்து எழுந்தாலும், பனிமேகங்கள் திரையிட்டு மறைக்க கோலப்போட்டி நடந்த கடற்கரை சாலை, ஊட்டியை போன்று ரம்மியாக இருந்தது.
கோலப்போட்டி 7.15 மணிக்கு முடிந்தபோது கருமேகங்களுக்கு இடையே கண்ணாமூச்சி காட்டிய கதிரவன், ஒருவழியாக பனித்துளிகளை துளைத்து கொண்டு பொன்னொளியை படர விட, கடற்கரை சாலையில் பூத்திருந்த அனைத்து கோலங்களும், அழகோவியங்களாக காட்சியளித்தன.
உற்சாகப்படுத்திய உறவுகள்
தான் போட்ட கோலத்தின் மீது தாய், வண்ணங்களை துாவி, தேர்ந்த ஓவியன் போல் இறுதி வடிவம் கொடுத்து தீட்டிக்கொண்டிருக்க, அதை கண்ட குழந்தைகள் மகிழ்ச்சியில் ஜாலியாக குதுகலித்தனர். இல்லத்தரசிகள் கோலம்போடுவதை உறவுகள் உற்சாகப்படுத்த, இந்த அழகியல் காட்சி காண்பவரையும் இன்பமயமான நினைவு வளையத்திற்கு அழைத்து சென்றது.
நடுவர் குழு
ஆயிரம் முத்து கோலங்களில் சில முத்துகளை எடுத்து பரிசுக் குரியவையாக தர வேண்டும். இந்த சவாலான பணியை விழுப்புரம் நாகலட்சுமி, சுமதி கோபால், திண்டிவனம் சுமதி சதீஷ், ஸ்ரீவித்யா சிவக்குமார், பாரதி பாஸ்கர், ஜெயந்தி சிவக்குமார், ஆகியோர் அடங்கிய நடுவர்கள் முன் வைக்கப்பட்டது. பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் அன்ன பறவைகள் போல், ஒவ்வொரு கோலங்களை பார்வையிட்டு, பரிசுக்குரிய கோலங்களை தேர்ந்தெடுத்து கொடுத்தனர்.
மெகா பரிசு
புள்ளிகள் இட்டு, சிக்கு கோலம் போடுவதே கடினம். ஆனால் சிக்குகோலத்தில் ஒரு கோலத்தின் மீது, மற்றொரு கோலத்தினை போட்டு ஸ்டார் வடிவத்தினை வெளிப்படுத்திய புதுச்சேரி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் இரண்டாவது மெயின்ரோடு 9வது குறுக்கு தெருவைச்சேர்ந்த அனிதா 48, விவசாயிகளின் வாழ்வியலை ரங்கோலியில் அழகாக பதிவு செய்திருந்த புதுச்சேரி ஜான்சி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த தேன்மொழி,34,பூத்து குலுங்கும் செம்பருத்தி மலர்களுக்கு இடையே புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரை டிசைன் கோலத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்திய காரைக்கால் கோவில்பத்து பேட்டைக்காரன் தெருவை சேர்ந்த சவுந்தர்யா, 24 ஆகியோருக்கு கோலப்போட்டியின் மகுடமாக மார்ட்டின் குழுமம் சார்பில், மூன்று யமாகா ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், சிவசங்கர் வழங்கி பாராட்டினர்.
சிறப்பு விருந்தினர்:
அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கொண்டாட்ட பரிசுகள்
'தினமலர்' கோலப்போட்டியில் மெகா பரிசு மட்டுமின்றி முதல் பரிசு, இரண்டாம், மூன்றாம் பரிசு என எட்டாம் பரிசு வரை அசத்தலான பரிசுகளும் வழங்கப்பட்டன. மெகா கோலப்போட்டியில் நிறைந்த மனசுடன், கை நிறைய பரிசுகளுடன் திக்குமுக்காடியவர்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகள் கைகுலுக்கி பாராட்டினர்.
கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் மகளிர் போட்ட கோலத்தை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்து, ரசித்து பார்த்தனர். கோலங்களுடன் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர். வெற்றிப்பெற்றவர்களிடம் கோலம் போட டிப்ஸ்களை கேட்டறிந்தனர். கோலத்து முன் நின்று செல்பி எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட்டு, லைக்குகளையும் அள்ளினர்.
தொடருனும்
வீடுகளில் முடங்கி இருந்த பெண்களுக்கு தினமலர் கோலப்போட்டி ஆண்டுதோறும் திறமை வெளிப்படுத்த சிறந்த களமாக அமைந்து வருகிறது. வீடு, குடும்பம், வேலை என அனைத்தும் ஒருபக்கம் இருந்தாலும், எங்களுக்கான திறமை வெளிப்படுத்தும் திருவிழா நாளாக, தினமலர் மெகா கோலப்போட்டி உள்ளது.
இந்தபோட்டியை தொடர்ந்து எங்களின் அன்பான தினமலர் நாளிதழ் தொடர்ந்து நடந்த வேண்டும் என மகளிர் வேண்டுகோள் வைத்தனர். கோலப்போட்டியில் சாதித்தவர்கள், கைநிறைய பரிசுகளுடன் திரும்ப, வெற்றிப் வாய்ப்பினை தவற விட்ட பெண்கள் தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த முறை சாதிப்போம் என நம்பிக்கையுடன் விடைபெற்றனர்.