தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுழலும் இரட்டை வாள்... சிலிர்க்க வைக்கும் தங்க மங்கை

சுழலும் இரட்டை வாள்... சிலிர்க்க வைக்கும் தங்க மங்கை

சுழலும் இரட்டை வாள்... சிலிர்க்க வைக்கும் தங்க மங்கை


UPDATED : ஆக 05, 2026 05:32 PM

ADDED : ஆக 05, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 05:32 PM ADDED : ஆக 05, 2026 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காற்றைக் கிழிக்கும் வாளின் 'கீச்' சத்தம்... புயலெனச் சுழலும் கைகள்... பார்க்கிறவங்களை மெய்சிலிர்க்க வைக்கும் வேகத்தோடு புதுச்சேரிக்குச் செல்லப் பெருமை தேடித் தந்திருக்கிறார் ராஜஸ்ரீ. கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற அகில இந்தியச் சிலம்பப் போட்டியில், மிகக் கடினமான இரட்டை வாள் வீச்சு பிரிவில் தங்கம் தட்டி வந்த 22 வயது வீராங்கனை..

பாகூர் முருகன் கோயில் பகுதியைச் சேர்ந்த இவர், தங்கம் வென்ற கையோடு ஒதுங்கிவிடாமல், கிராமப்புறப் பெண்களுக்குச் சிலம்பத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து அடுத்த தலைமுறை வீராங்கனைகளை உருவாக்கும் மிஷனில் இறங்கியிருக்கிறார்.

நேரில் சந்தித்தபோது, முகத்தில் அத்தனை தெளிவும், பேச்சில் புயல் வேகமும் மின்ன நம்மிடம் உரையாடினார்.

சிலம்பத்துக்குள்ள எப்படி வந்தீங்க... அந்த ஆர்வம் எப்படித் தொற்றிக்கிச்சு...: என் ஆரம்பக்காலப் படிப்பு எல்லாமே ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில்தான் போச்சு. எனக்கு 13 வயசு இருக்கும்போது தான் முதன்முறையா சிலம்பத்தைப் பார்க்குற வாய்ப்பு கிடைச்சது. ஆரம்பத்துல ஏதோ ஆசையா கத்துக்கப் போனேன். ஆனா, போகப் போக என்னை அறியாமலே அந்தச் சிலம்பக் கம்போட சுழற்சிக்குள்ள நான் லயிச்சுப் போயிட்டேன். அன்னைக்குத் தொடங்குன பந்தம்... இன்னைக்கு அதுதான் என் மூச்சு, அதுதான் என் வாழ்க்கைன்னு மாறிடுச்சு...

தேசியப் போட்டியில இரட்டை வாள் வீச்சு பிரிவுல தங்கம் வென்ற அனுபவம் பற்றி...: சிலம்பத்துல எத்தனையோ பிரிவுகள் இருந்தாலும், இந்த இரட்டை வாள் வீச்சு ரொம்பவே சவாலானதுங்க. ஒரே நேரத்துல மனசும், கண்ணும், கையும் ஒரே நேர்கோட்டுல புயல் மாதிரி சுழலணும். வெறும் வாளைச் சுழற்றினா மட்டும் போதாது. அந்த வீச்சுல ஒரு கலை நேர்த்தியும், நேர்க்கணிப்பும் இருக்கணும். அதை நான் சரியா வெளிப்படுத்தினதால தான் அந்தப் தங்கப் பதக்கம் என் கைக்கு வந்தது.என் வாழ்நாள்ள மறக்கவே முடியாத அழகான தருணம் அது.

இப்போ கிராமப்புறப் பெண்களுக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்துட்டு வர்றீங்களே... அந்த எண்ணம் எப்படி வந்துச்சு...: மேற்கத்திய நாடுகளோட தற்காப்புக் கலைகளை நாம ரொம்பப் பெருமையா பேசுறோம். ஆனா, நம்ம மண்ணோட பாரம்பரியச் சிலம்பம் அதுக்கு எந்த விதத்துலயும் சளைச்சது கிடையாதுங்க.. இந்த வீரக் கலை அழியக் கூடாது. அடுத்த தலைமுறைப் பொண்ணுங்க கைக்கு போகணும்னுதான் கிராமப்புறத்துல இருக்கிற பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன்.

இப்போ பொண்ணுங்க ரொம்பவே ஆர்வமா வந்து கத்துக்குறாங்க. நான் துாவியிருக்கிறது ஒரு சின்ன விதைதான்... ஆனா, இது கண்டிப்பா நாளைக்கு ஒரு பெரிய ஆலமரமா வளரும்ங்கிற நம்பிக்கை எனக்கு முழுசா இருக்கு.

ஒரு வீராங்கனையா உங்க மனசுல இருக்குற மிகப்பெரிய ஆதங்கம் என்ன...: சற்று அழுத்தமான குரலில், என்னை மாதிரி நூற்றுக்கணக்கான பேரு சிலம்பத்தையே சுவாசமா நினைச்சு ஓடிக்கிட்டு இருக்கோம். ஆனா, புதுச்சேரி அரசு விளையாட்டு இடஒதுக்கீட்டுல சிலம்பத்தை இன்னும் சேர்க்கவே இல்லைங்கிறது எனக்கு மிகப்பெரிய வருத்தம். இதுக்காகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்திட்டோம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை, புதுச்சேரி அரசு உடனே அதிகாரப்பூர்வ விளையாட்டுப் பட்டியல்ல சேர்க்கணும். அதுதான் எங்களை மாதிரி வீராங்கனைகளின் உழைப்புக்குக் கிடைக்கிற உண்மையான அங்கீகாரமா இருக்கும்.. கண்களில் நம்பிக்கையும், கைகளில் லாவகமுமாக விடைபெறும் ராஜஸ்ரீயின் வார்த்தைகளில் இருப்பது ஒரு வீராங்கனையின் குரல் மட்டுமல்ல... தன் மண்ணின் கலை மீதான அசைக்க முடியாத காதல்..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us