/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதையும் செய்ய முடியாதவர்கள் குறை கூறுகின்றனர்
/
எதையும் செய்ய முடியாதவர்கள் குறை கூறுகின்றனர்
ADDED : ஜன 28, 2026 05:44 AM

புதுச்சேரி: ஒருங்கிணைந்த காமராஜர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் (நகரம்)-2.0 கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ. 5 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் தொடக்க விழா மற்றும் முதல் தவணை நிதியுதவி வழங்கும் விழா நேற்று கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
கூரை வீடுகள் மழை காலங்களில் ஒழுகும். வெயில் காலங்களில் எரியும். இது மிகுந்த சிரமத்தை தரும். இதையெல்லாம் போக்க, கூரை வீடுகள் எல்லாம் கல் வீடுகளாக, கான்கரீட் வீடுகளாக வர வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும் என அதிகாரிகளிடம் கேட்டேன். அதற்கு அதிகாரிகள், 400 சதுரடிக்கு வீடு கட்ட ரூ.40 ஆயிரம் செலவாகும் என்றார்கள். அந்த ரூ.40 ஆயிரத்தையும் மொத்தமாக கொடுப்போம் என்று முடிவெடுத்து கடந்த 2003ம் ஆண்டு காமராஜ் கல்வீடு கட்டும் திட்டத்தை துவங்கினோம். பின்னர் கழிவறை வசதியுடன் கட்ட ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.படிப்படியாக உயர்த்தி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. அப்போது 90 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் 2015ல் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார். நாம் ரூ.2 லட்சம் கொடுத்துக் கொண்டிருந்தோம். மத்திய அரசு ரூ.1.50 லட்சம் கொடுத்தது. இதனை சேர்ந்து ரூ.3.50 லட்சம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியில் கொடுத்தார்களா? அதனை கொடுத்திருந்தால் நிச்சயம் எல்லா வீடுகளும் கட்டப்பட்டிருக்கும்.
இந்த ஆட்சி எல்லாவற்றையும் செய்து கொண்டே இருக்கிறது. தற்போது ரூ.27 கோடி கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம். ஓரிரு நாளில் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க உள்ளோம்.
கல்வீடு கட்டும் திட்டத்தில் காலத்துக்கு ஏற்றவாறு, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்துக்கு தகுந்தாற்போல் நிதியை உயர்த்தி தர வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்ய முடியாதவர்கள், தற்போது தேர்தல் வருகிறது என்றதும், நடைபயணம் என்று ஏதேதோ சொல்லிக் கொண்டுள்ளனர்.
ஆனால் நமது அரசு சொன்னதை செய்கின்ற அரசு. திட்டங்களை செயல்படுத்தும் அரசு.
பிரதமர் பல திட்டங்களை இங்கே கொண்டு வர இருக்கின்றார். அதற்கான நிதியை அவர் இங்கு வரும்போது கூறுவார்.
வீடற்றவர்களுக்கு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல வீடுகள் கட்டப்பட்டிருக்கிறது. அவை விரைவில் பயனாளிகளுக்கு, வீடற்றவர்களுக்கு, சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

