ADDED : செப் 12, 2026 11:53 PM
புதுச்சேரி: கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை வெளியில் வர சொன்ன பாதுகாப்பு வீரர்களை தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ‘ராக் பீச்’ கடற்கரையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கின்றனர்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு வீரர்கள் (லைப் கார்டுகள்) பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
அவர்கள் கடலில் பொதுமக்கள் யாரும் இறங்கவிடமால் கண்காணித்தும், எதிர்பாராதவிதமாக யாராவது கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டால் அவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி, காந்தி சிலை பின்புறம் வெளிமாநிலத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடலில் இறங்கி நேற்று மாலை குளித்தனர்.
அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு வீரர்களான காலாப்பட்டு ரமேஷ், கனகசெட்டிக்குளம் சுந்தர் ஆகியோர் கரைக்கு திரும்பும்படி எச்சரித்தனர்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள், பாதுகாப்பு வீரர்களான ரமேஷ், சுந்தர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த 2 பேரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெரியகடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
