தீபாவளி பண்டிகையில் விண்ணை முட்டிய நச்சு புகை மண்டலம்: சுற்றுச்சூழல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தீபாவளி பண்டிகையில் விண்ணை முட்டிய நச்சு புகை மண்டலம்: சுற்றுச்சூழல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ADDED : நவ 10, 2026 03:39 PM
பண்டிகைக் காலக் கொண்டாட்டங்கள் எப்போதுமே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளி வழங்குபவை. அதிலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என ஊரே கோலாகலமாய் மாறும். ஆனால், அந்த உற்சாகக் கொண்டாட்டங்களின் பின்னணியில் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் எதிர்கொள்ளும் சவால்களும், பொதுமக்களின் ஆரோக்கியம் சந்திக்கும் ஆபத்துகளும் ஒவ்வொரு ஆண்டும் தீவிரமடைந்து வருகின்றன.
மிகவும் மோசம்
இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையின்போது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்புறக் காற்றின் தரக் கண்காணிப்பு முடிவுகள் சமூகத்தை எச்சரிக்கும் வகையில் வெளியாகியுள்ளன.அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தீபாவளித் தினத்தன்று காற்றின் தரக் குறியீடு 355 என்ற புள்ளிகளை எட்டி, மிகவும் மோசமான நிலையைப் பதிவு செய்துள்ளது. இது சாதாரண நாட்களில் பதிவாகும் காற்றின் தரக் குறியீட்டைவிட ஏழு மடங்கு அதிகமாகும் என்பது சூழலியலாளர்களையும் பொதுமக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
தீபாவளிக்கு முன்
தீபாவளிக்கு முந்தைய நாட்களில் நிலவிய காற்றின் தரத்திற்கும், பட்டாசுகள் வெடிக்கப்பட்ட தீபாவளி நாளில் பதிவான தரவுகளுக்கும் இடையேயான ஒப்பீடு, காற்று எந்தளவுக்கு நச்சுத் தன்மையால் நிரம்பியுள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
தீபாவளிக்கு முந்தைய கண்காணிப்பின்போது, காற்றில் உள்ள தூசுப் பொருட்களின் அளவான பி.எம்–10 எனப்படும் பெரிய நுண்துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 36 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருந்தன.
அதேபோல், மிகச் சிறிய நுண்துகள்களான பி.எம்–2.5 அளவு 24 மைக்ரோ கிராம் என்ற அளவிலும், கந்தக டை ஆக்சைடு 4.7 மைக்ரோ கிராம் அளவிலும், நைட்ரஜன் ஆக்சைடுகள் 11 மைக்ரோ கிராம் அளவிலும் பதிவாகியிருந்தன. இவை அனைத்தும் அப்போதைய சூழலில் வழக்கமான மற்றும் பெருமளவு கட்டுக்குள் இருக்கக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவைக் குறிப்பதாக இருந்தன.
தீபாவளியன்று
ஆனால், தீபாவளி நாளில் பதிவான காற்று தரக் கண்காணிப்பு முடிவுகள் முற்றிலும் மாறுபட்ட கடுமையான சூழ்நிலையை வெளிப்படுத்துகின்றன. தீபாவளி நாளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரக் கண்காணிப்பில், பி.எம்–10 அளவு தாறுமாறாக உயர்ந்து ஒரு கன மீட்டருக்கு 216 மைக்ரோ கிராம்களாகப் பதிவானது. இது முந்தைய நாட்களை ஒப்பிடும்போது ஆறு மடங்கு அதிகமாகும். இன்னும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, மனிதர்களின் நுரையீரலுக்கு மிக ஆழமாகச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் பி.எம்–2.5 நுண்துகள்களின் அளவு எட்டு மடங்கு அதிகரித்து 191 மைக்ரோ கிராம்களாகப் பதிவாகியுள்ளது.
நச்சு வாயுக்கள்
மேலும், நச்சு வாயுக்களான கந்தக டை ஆக்சைடு அளவு 5.7 மைக்ரோ கிராம்களாகவும், நைட்ரஜன் ஆக்சைடுகளின் அளவு 17 மைக்ரோ கிராம்களாகவும் சிறிய அளவிலான அதிகரிப்பைக் காட்டியுள்ளன. பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், கந்தகம், பேரியம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகள் வெடிக்கும்போது வெளிவரும் அடர்ந்த புகை மண்டலம் காற்றில் கலப்பதால் இந்த ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது.
புகை மண்டலம்
குறிப்பாக, காற்றில் எளிதில் கரையாமல் பல மணி நேரம் தொங்கிக் கொண்டிருக்கும் பி.எம்–2.5 மற்றும் பி.எம்–10 நுண்துகள்கள் மனிதர்களின் சுவாச மண்டலத்தை நேரடியாகத் தாக்குவதோடு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இருதய நோயாளிகளுக்கு கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. முதியவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் இளம் குழந்தைகள் இந்த நச்சுக்காற்றால் மிக எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
எச்சரிக்கை மணி
விஞ்ஞானபூர்வமாக நடத்தப்பட்ட இந்தத் சுற்றுச்சூழல் ஆய்வு பகுப்பாய்வு, வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக, பண்டிகை கொண்டாட்டத்தின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் தரம் எந்தளவுக்கு மோசமடைந்து வருகிறது என்பதற்கான எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.
கொண்டாட்டங்கள் அவசியம்தான் என்றாலும், இயற்கையையும் மனித குலத்தின் ஆரோக்கியத்தையும் காக்கும் விழிப்புணர்வும், மாற்று வழிமுறைகளைக் கையாளும் பொறுப்புணர்வும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது என்பதை புதுச்சேரியின் ஒவ்வொரு குடிமகன்களும் உணர்ந்து இனி பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும். இல்லையெனில் தலைநகர் டில்லிக்கு ஏற்பட்ட அதே கதி தான் புதுச்சேரிக்கும் ஏற்படும்.
