புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து போலீசார் ஆய்வு
புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து போலீசார் ஆய்வு
ADDED : ஆக 12, 2026 08:11 PM
பாகூர்: புதுச்சேரி – கடலுார் சாலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கிய ஐந்து ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை மீறிவோர் மீது அபராதம் விதித்தல், வழக்கு பதிவு செய்தல் போன்ற நடவடிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் புதுச்சேரி – கடலுார் சாலை காட்டுக்குப்பத்தில், ஸ்பீடு கன் மூலமாக வாகனங்களின் வேகத்தை கணக்கிட்டு வருகின்றனர்.
அதில், நிர்ணயக்கப்பட்ட 50 கி.மீ., வேகத்தை கடந்து அதிவேகத்தில் வாகனங்களை இயக்கிய ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களில் நான்கு பஸ், ஒரு லாரி என ஐந்து வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
