/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்: பழைய நடைமுறையை கொண்டுவர போர்க்கொடி
/
கல்லுாரி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்: பழைய நடைமுறையை கொண்டுவர போர்க்கொடி
கல்லுாரி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்: பழைய நடைமுறையை கொண்டுவர போர்க்கொடி
கல்லுாரி பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்: பழைய நடைமுறையை கொண்டுவர போர்க்கொடி
ADDED : அக் 01, 2024 06:13 AM

புதுச்சேரி: கல்லுாரி பேராசிரியர்களுக்கு சம்பளம் போடுவதில் சிக்கல் தொடருவதால், பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் தலா ஓர் கலைக் கல்லுாரி தொழில்நுட்பக் கல்லுாரி, சட்டக்கல்லுாரி, மருத்துவக் கல்லுாரி, நுண்கலை கல்லுாரி ஆகியவை சொசைட்டி கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக, 13 உயர் கல்வி குழுமங்களின் கீழ் 21 கல்லுாரிகள் உள்ளன. இங்கு மொத்தமாக 5 ஆயிரம் பேராசிரியர்கள், 1000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், பேராசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது, கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சொசைட்டி கல்லுாரிகளில் சில கல்லுாரிகளில் நிதி இருந்தது. சம்பளம் போட காலதாமதம் ஏற்படுவதை தொடர்ந்து, தனது சொந்த நிதியை மடை மாற்றம் செய்து ஒருவழியாக சமாளித்து வருகின்றன. ஆனால் பெரும்பாலான கல்லுாரிகள் சம்பளம் போடாமல் பதில் சொல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அது ஒரு பொற்காலம்
புதுச்சேரியில் சொசைட்டி கல்லுாரிகளுக்கு ஊதியம் முன்பு சரியான நேரத்துக்கு வந்தது. ஓராண்டிற்கு அனுமதி பெறப்பட்டு, சம்பளம் போடப்பட்டது. இதனால் சம்பள பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. ஆனால், கடந்த 2017ல் அப்போதைய கவர்னர் கிரண்பேடி மாதம் தோறும் அனுமதி பெற்றுத்தான் ஊதியம் தர வேண்டும் என்று புதிய உத்தரவிட்டார். அதன் பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி பெற உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன் பிறகும் ஊதியம் மாதந்தோறும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி பெற வேண்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட, ஆறு மாதம் முடிந்து மீண்டும் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகின்றது. காலத்தோடு சம்பளம் போடுவதற்கான நடைமுறைகள் முன் கூட்டியே நிதி ஒதுக்கி துவங்கப்படுவதில்லை.
இதுவே சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் அல்லாடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் 6 ஆயிரம் பேருக்கு ஊதியம் தரப்படாமல் பாதிக்கப்பட்டு நிலை குலைந்துபோய் உள்ளனர். எனவே, பழைய நடைமுறையை அதாவது ஓராண்டிற்கு சம்பள அனுமதி என்பதை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அடுத்த கட்ட போராட்டத்திற்கு ரெடியாகி வருகின்றனர்.
கொந்தளிப்பு
கல்லுாரி ஆசிரியர்கள் கூறும்போது, காலத்தோடு சம்பளம் போடாததால் ஆசிரியர்கள் இன்று கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலையில் எழுந்தால் கடன்காரர்களின் தொல்லை. வாங்கிய லோன்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியவில்லை.
மருத்துவ செலவையும் சமாளிக்க முடியவில்லை. ஆனால் உயர் கல்வி துறை சம்பளம் போடுவதில் மெத்தனமாக செயல்படுகின்றது.
குறிப்பாக ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இது சாபகேடாக உள்ளது. எனவே, எங்களுக்கு பழைய முறைப்படி ஓராண்டிற்கு சம்பள அனுமதி என்ற நடைமுறை மீண்டும் கொண்டு வர கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர் கொந்தளிப்புடன்.