மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் இரு பெண்கள் மீது வழக்கு பதிவு
மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் இரு பெண்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 25, 2026 03:50 PM
பாகூர்: மாற்றுத்திறனாளி பெண் மீது தாக்குதல் நடத்திய பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வள்ளுவர்மேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மனைவி அனு, 33; மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 21ம் தேதி தனது தாயுடன், அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் பின்புறம் உள்ள நிலத்தில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ராதா, ருக்கு இருவரும், அனு மற்றும் அவரது தாயாரை இழிவான வார்த்தையில் திட்டி, தடியால் தாக்கி உள்ளனர். இதில், அனு அங்கேயே மயங்கி விழுந்து விட்டார்.
தகவலறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் ராதா, ருக்கு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
