/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.2 கோடி கஞ்சா வழக்கு வேலுார் நபரிடம் விசாரணை
/
ரூ.2 கோடி கஞ்சா வழக்கு வேலுார் நபரிடம் விசாரணை
ADDED : ஜூலை 18, 2025 04:42 AM
காரைக்கால்: காரைக்காலில் ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்திய வழக்கில் வேலுார் நபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்காலில் கடந்த 15ம் தேதி நள்ளிரவு நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரைக்கால் - நாகப்பட்டினம் சாலையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில், 26 கிலோ கஞ்சா இருந்தது. காரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் மன்னார்குடி திலீப், 34; காரைக்கால், கீழக்காசாக்குடி குமரவேல், 29; எனவும், இருவரும் தமிழகத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கீழக்காசாக்குடி லட்சுமி நகரில் உள்ள வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
லட்சுமி நகரில் உள்ள வீட்டில் 270 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடி. நகர போலீசார் வழக்குப் பதிந்து திலீப், குமரவேல் இருவரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் இரு சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் மாவட்ட நீதிபதி மோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
வழக்கில் முக்கிய குற்றவாளியான வேலுார் பகுதியை சேர்ந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.