ADDED : செப் 26, 2026 05:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் வில்லியனுார், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது
விநாயகம்பட்டு அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி சரஸ்வதி தேவியின் பரிபூரண ஆசியையும், கல்வியையும் பெற குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சியை குழந்தைகள் மேம்பாட்டு நல அதிகாரி நிர்மலா தேவி குத்துக்கேற்றி துவக்கி வைத்தார்.
சோரப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குணசீலன், அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி ஆகியோர் சமச்சீர் உணவுப் பழக்கம், சத்தான உணவுத் தேர்வு, நோய்களைத் தடுக்கும் உணவு முறைகள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விளக்கமளித்தனர்.
செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வித்யாரம்பம் நிகழ்ச்சியில், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் பங்கேற்று, நெல், மணல், அரிசி ஆகியவற்றில் ‘அ’, ‘ஆ’ எழுதினர். அனைத்து குழந்தைகளுக்கும் எழுதுபொருள் மற்றும் பலகை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.
