/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடி சுற்றுலா திட்டத்திற்கு ஒப்புதல் எப்போது?
/
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடி சுற்றுலா திட்டத்திற்கு ஒப்புதல் எப்போது?
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடி சுற்றுலா திட்டத்திற்கு ஒப்புதல் எப்போது?
மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடி சுற்றுலா திட்டத்திற்கு ஒப்புதல் எப்போது?
ADDED : ஆக 31, 2025 12:12 AM

புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் அடுத்துள்ள மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை, மத்திய அரசின் சுற்றுலா திட்டத்தில் கீழ் கடந்த 2018ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உணவு விடுதிகள், ஓய்வு அறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன.
பணிகள் முடிவடையாத நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இக்கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சுற்றுலாவை மேம்படுத்திட வேண்டும் என, கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த மே மாதம் 9ம் தேதி மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அவர், இங்கு சுற்றுலா திட்டம் எப்போது துவங்கப்பட்டது, ஏன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
அதற்கான காரணம், தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏதேனும் தடைகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மும்பையை சேர்ந்த தனியார் ஆலோசனை குழு அதிகாரிகள், பல்மைரா கடற்கரை சுற்றுலா மேம்பாட்டு திட்டம் தொடர்பான, விரிவான திட்ட அறிக்கை குறித்து கவர்னர் கைலாஷ்நாதனிடம் விளக்கினர்.
இது தொடர்பாக, சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய கவர்னர் கைலாஷ்நாதன், இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, பல்மைரா கடற்கரை பகுதியில், தனியார் பங்களிப்புடன் கூடிய உயர்தர ஓட்டல், மாநாடு அரங்கம், 200 படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதி, பொழுது போக்கு பூங்கா, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுற்றுலா நகரத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயார் செய்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நிறைவடையும் பட்சத்தில், புதுச்சேரி அரசுக்கு சுமார் 40 முதல் 50 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கும். மேலும், அப்பகுதி பொருளாதார வளர்ச்சி அடைவதோடு சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில், அந்த திட்ட அறிக்கையின் நிகழ்நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே, மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை சுற்றுலா நகர திட்ட வரைவு அறிக்கைக்கு, மத்திய அரசின் ஒப்புதலை பெற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.