சிவப்பு ரேஷன் அட்டைகளை மஞ்சள் அட்டையாக மாற்றியது ஏன்? விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., கேள்வி
சிவப்பு ரேஷன் அட்டைகளை மஞ்சள் அட்டையாக மாற்றியது ஏன்? விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., கேள்வி
UPDATED : நவ 18, 2026 05:51 PM
ADDED : நவ 18, 2026 05:51 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 57 ஆயிரம் சிவப்பு ரேஷன் அட்டைகள், எதன் அடிப்படையில் மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றப்பட்டது என, தி.மு.க., எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர், கூறியதாவது;
புதுச்சேரி மாநிலத்தில் 57 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகள், எதன் அடிப்படையில் மஞ்சள் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. சிவப்பு ரேஷன் கார்டு அரிசி பெறுவதற்கு மட்டுமல்ல, டயாலிசிஸ் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கும் பயன்படுகிறது.
அவர்களின் ரேஷன் கார்டுகள், திடீரென மஞ்சள் கார்டுகளாக மற்றப்பட்டுள்ளது. அவர்கள், சிகிச்சைக்கு செல்லும் போது, பணம் கேட்பதால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
நாங்கள் தகுதி உள்ள நபர்களுக்கு, சிவப்பு ரேஷன் கார்டுகளை மாற்றி கொடுங்கள் என கேட்டுள்ளோம். ஆனால், சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருந்தவர்களை மஞ்சள் கார்டுகளாக மாற்றி வருகிறார்கள். இந்த விஷயத்தில், சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் அமைதி காப்பது ஏன்.
நிர்வாக சீர்கேடு புதுச்சேரியில் தலைவிரித்து ஆடுகிறது. கடந்த ஆட்சியில், மஞ்சள் ரேஷன் கார்டுகளை, சிவப்பு கார்டுகளாக மாற்றிட 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து மாற்றப்பட்டுள்ளது. அதற்கு நானே சாட்சி.
ரேஷன் கார்டு மாற்றப்பட்டது குறித்து உடனே விளக்கத்தை கொடுங்கள். மாற்றப்பட்ட மஞ்சள் ரேஷன் கார்டுகளை, உடனே சிவப்பு கார்டுகளாக மாற்றிட வேண்டும். ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ள புதிய ரேஷன் கார்டுகளை வழங்கிட வேண்டும்’ என்றார்.
