/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் ஏரியில் செயற்கை தீவுகளை உருவாக்கி இயற்கை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
/
பாகூர் ஏரியில் செயற்கை தீவுகளை உருவாக்கி இயற்கை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
பாகூர் ஏரியில் செயற்கை தீவுகளை உருவாக்கி இயற்கை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
பாகூர் ஏரியில் செயற்கை தீவுகளை உருவாக்கி இயற்கை சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுமா?
ADDED : அக் 20, 2025 12:27 AM

பாகூர்: பாகூர் ஏரியில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை சுற்றுலா திட்டத்தை செயல் படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி, 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 193 மில்லியன் கன அடிநீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலமாக பாகூர், சேலியமேடு, அரங்கனுார், பின்னாச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
ஏரியில் நடுப்பகுதியில் உள்ள கடம்பை மர காடுகளில் ஏராளமான பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்து வந்தன. இதனால், பறவைகளின் சொர்க்கபுரியான பாகூர் ஏரி, அறிவிக்கப்படாத பறவைகள் சரணாலயமாகவும் திகழ்ந்து வந்தது.
நீர்க்காகம், பாம்புதாரா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, வெள்ளைக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகள் பாகூர் ஏரியை அலங்கரித்து வந்தன. மரங்களில் தங்கி இருக்கும் பல வகையான பறவைகளின் எச்சம் ஏரி நீரில் கலந்து ஊட்டமிக்க பாசன நீராக வயல்வெளிக்கு பயன்பட்டதால், மகசூலும் அதிகமாக இருந்தது. ஏரியில் இருந்த காடுகள் அழிந்து போனதாலும், இயற்கை சூழல் பாதிக்கப்பட்டதாலும் பறவைகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த சில ஆண்டிற்கு முன், மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் மூலமாக, பாகூர் ஏரியில் 37 வகையான பறவையினங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளும் வசிப்பதாக கணக்கிடப்பட்டது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் ஆங்காங்கே உள்ள மரங்களில், சீசன் காலங்களில் வரும் சில வகையான வெளிநாட்டு பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்து தாயகம் திரும்பி செல்கின்றன.
இதனால், பறவைகளை கவரும் வகையில், பாகூர் ஏரியில் நீர் பிடிப்பு பகுதியில் செயற்கை மண் தீவுகளை உருவாக்கி அதில் மரங்களை வளர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், படகு குழாம், பறவைகளை காண்பதற்கான 'வாட்ச் டவர்' அமைத்து, ஏரியில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, புதுச்சேரி அரசு கடந்த 2013ம் ஆண்டு, பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த நிலையில், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. புதுச்சேயின் கவர்னராக கிரண்பேடி இருந்த போது, அவர் பாகூர் ஏரியில் பல முறை ஆய்வு மேற்கொண்டு, ஏரியை அழகுப்படுத்தி, இயற்கை சுற்றுலா திட்டத்தை செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின், இதுவரை சுற்றுலா திட்டம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, பாகூர் ஏரியின் கரைகளை இணைக்கும் வகையில், அரங்கனுார் கலிங்கல் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ.10.10 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், பாகூர் ஏரியின் 9 கி.மீ., நீளமுள்ள கரையை மேம்படுத்தி போக்குவரத்திற்கு ஏதுவாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது. கலிங்கல் பாலம் மற்றும் கரையின் மீது தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றால், பாகூர் ஏரியில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.
எனவே, பாகூர் ஏரியில் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்ப, செயற்கை மண் திட்டுகள் அமைத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை சுற்றுலா திட்டத்தை செயல்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.