/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
/
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
உயர்கல்வியில் பிராந்திய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமா? கொந்தளிப்பில் புதுச்சேரி மாணவர்கள்
ADDED : செப் 08, 2025 02:41 AM
புதுச்சேரி: பிராந்திய ஒதுக்கீட்டினால் புதுச்சேரி மாணவர்களின் சீட்டு பறிபோய் வருகிறது. பாரபட்சமான இந்த இட ஒதுக்கீட்டினை ரத்து செய்ய வேண்டும் என, புதுச்சேரி பிராந்திய மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் கல்வி நிறுவனங்கள் இல்லாத சூழ்நிலையில், பிராந்திய இட ஒதுக்கீடு முறை கடந்த 2006ல் இருந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு படிப்பிலும் 75 சதவீத புதுச்சேரி மாணவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. 18 சதவீதம் காரைக்கால், 4 சதவீதம் மாகி, 3 சதவீதம் ஏனாம் மாணவர்கள் வழங்கப்படுகிறது.
இதில், பெயருக்கு தான் புதுச்சேரி பிராந்தியத்திற்கு 75 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் புதுச்சேரி பிராந்தியத்திற்கு தனி இட ஒதுக்கீடு கிடையாது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அந்தந்த பிராந்திய மாணவர்கள் மட்டுமே சீட் பெற முடியும்.
ஆனால் அது பிராந்திய இட ஒதுக்கீட்டில் நடப்பதில்லை. பிற 3 பிராந்திய மாணவர்களும் தங்கள் பிராந்தியத்தில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டினை பெற்ற பிறகு பின், அவர்கள் புதுச்சேரியில் உள்ள பொது ஒதுக்கீட்டில் போட்டியிட முடியும்.
அதேவேளையில் புதுச்சேரி பிராந்திய மாணவர்கள், பிற பிராந்திய இடஒதுக்கீட்டில் கீழ் போட்டி போட முடியாது. இந்த இட ஒதுக்கீடு இந்தியாவில் புதுச்சேரி மட்டுமே இன்றும் அமலில் உள்ளது.
இந்த விகிதாசாரப்படி புதுச்சேரி மாணவர்களை விட மற்ற பிராந்திய மாணவர்களுக்கு தான் அதிக இடங்கள் கிடைத்து வருகின்றன. நீட் நுழைவு தேர்விற்கு பிறகு இது இன்னும் மோசமாகி விட்டது. பிற பிராந்திய மாணவர்கள், புதுச்சேரி பிராந்திய இட ஒதுக்கீட்டில் புகுந்து சீட்டுகளை தட்டி செல்கின்றனர்.
இதுவரை நடந்த மருத்துவம், இன்ஜினியரிங் கலந்தாய்வில் இந்தாண்டும் 200க்கும் மேற்பட்ட இடங்களை பிற பிராந்திய மாணவர்கள் தட்டி பறித்துவிட்டனர். பிற பிராந்திய மாணவர்களை துாக்கிவிட அமல்படுத்தப்பட்ட இந்த இடஒதுக்கீடு புதுச்சேரி பிராந்திய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து அதலபாதாளத்தில் தள்ளி வருகிறது. இது தான் அரசின் இட ஒதுக்கீடு கொள்கையா என, புதுச்சேரி பிராந்திய மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பிராந்திய இட ஒதுக்கீட்டினை எதிர்த்து பல்வேறு காலக் கட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவு என்பதால் ஐகோர்ட்டும் கைழுவிவிட்டது. அரசு கொள்கை முடிவு எடுத்து, பிராந்திய இட ஒதுக்கீட்டினை ரத்து செய்தால் மட்டுமே புதுச்சேரி பிராந்திய மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கும்.
பாரபட்சமான இந்த பிராந்திய ஒதுக்கீட்டு கொள்கையை ரத்து செய்துவிட்டு அனைத்து பிராந்தியத்திற்கு சம வாய்ப்பான புதிய இட ஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும் என்பதே புதுச்சேரி மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
என்ன செய்கின்றனர்
புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள்
பிராந்திய இட ஒதுக்கீடு சம்பந்தமாக விவாதம் எழும்போதெல்லாம் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி பாகுபாடின்றி ஓரணியில் நின்று ரத்து செய்ய விடாமல் தடுத்து விடுகின்றனர். ஆனால் புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் புதுச்சேரி பிராந்திய மாணவர்களுக்கு நடக்கும் அநியாயத்தை தடுக்காமல், தட்டி கேட்காமல் வேடிக்கை பார்க்கின்றனர் என, மனம் குமுறி வருகின்றனர் புதுச்சேரி மாணவர்கள்.
இது சாம்பிள் தான்....
கால்நடை படிப்பில் இந்தாண்டு புதுச்சேரி-3, காரைக்கால்-1 என 4 இடபுள்யூ சீட்டுகள் உள்ளன. ஏனாம் பிராந்தியத்திற்கு ஒரு சீட்டு கூட இல்லை. ஆனால் இந்த ஏனாம் பிராந்திய மாணவர்கள் புதுச்சேரி இடபுள்யூ சீட்டுகளில் போட்டியிட்டு, புதுச்சேரி மாணவர்களுக்கான வாய்ப்பில் வந்து 3 சீட்டுகளை தட்டி பறித்துவிட்டனர். இப்படிப்பில் மொத்தமுள்ள 45 சீட்டுகளில் 7 சீட்டுகளை பிராந்திய மாணவர்கள் தட்டி துாக்கிவிட்டனர். இப்படி தான் ஒவ்வொரு படிப்பிலும் இடங்கள் பறிபோகிறது.