/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் களம் இறங்குவாரா?
/
அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் களம் இறங்குவாரா?
அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் களம் இறங்குவாரா?
அலங்கோலமான வேல்ராம்பட்டு ஏரி கிரண்பேடி வழியில் கவர்னர் களம் இறங்குவாரா?
ADDED : பிப் 09, 2026 04:59 AM

புதுச்சேரி: ஒரு காலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தின் நம்பிக்கையாக, பசுமையின் முகவரியாக திகழ்ந்த வேல்ராம்பட்டு ஏரி, இன்றைக்கு அலட்சியத்தின் சாட்சியாக கண்ணீர் வடிக்கிறது.
165 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள வேல்ராம்பட்டு ஏரி, முதலியார்பேட்டை - கொம்பாக்கம் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் முக்கிய நீர்நிலையாக பழங்காலம் தொட்டேஇருந்து வருகிறது. பராமரிப்பு இல்லாததால், 2016ம் ஆண்டுக்கு முன், இந்த ஏரி படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் கவர்னராக இருந்த கிரண்பேடி எடுத்த திடமான முயற்சிகளால், ரூ.75 லட்சம் செலவில் சுற்றுவேலிகள் அமைக்கப்பட்டது.தார் சாலை போடப்பட்டு, ஏரி புத்துயிர் பெற்றது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அதில் படகு சவாரியும் தொடங்கப்பட்டது.மக்கள் மீண்டும் ஏரியை நோக்கி திரும்பினர்.
ஆனால், கிரண்பேடி விடைபெற்ற பிறகு, வேல்ராம்பட்டு ஏரி மீண்டும் அலட்சியத்தின் இருளில் மூழ்கியுள்து. பராமரிப்பு குன்றியதால், ஏரியின் அழகு மெல்ல மெல்ல சிதைந்துபோய் விட்டது.
தற்போது சுற்றுவேலிகள் களவாடப்பட்டு, மீன் பிடிக்கவும், பறவைகளை வேட்டையாடவும் திருட்டு வழிகள் உருவாகியுள்ளன. எங்கிருந்து வேண்டுமானாலும் நுழையக்கூடிய நிலை, ஏரியை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், ஏரி மீண்டும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறி விட்டது. இந்நிலை தொடர்ந்தால், ஒரு காலத்தில் உயிர்ப்புடன் திகழ்ந்த இந்த ஏரி, மீண்டும் கூவம் போன்று மாறும் அபாயம் உருவாகியுள்ளது.
மற்றொரு பக்கம், ஏரியின் மவுன எதிரியாக ஆகாயத்தாமரை வேகமாக படர்ந்து வருகிறது. குறிப்பாக, ஏரி வாய்க்கால்களில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மெல்ல வேல்ராம்பட்டு ஏரிக்குள் நுழைந்து, பழையபடி நீரின் சுவாசத்தை அடைக்கும் சூழல் உருவாக்கியுள்ளது.கிரண்பேடி வழியில் தற்போதைய கவர்னர் கைலாஷ்நாதனும் புதுச்சேரியின் நீர்நிலைகள் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார். நீர்வளத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயல்திட்டங்களை அவர் தயார் செய்து வருகிறார்.
அந்த தொடர்ச்சியாக வேல்ராம்பட்டு ஏரியையும் கவர்னர் மீட்டெடுக்க வேண்டும். இந்த ஏரியில் மீண்டும் படகு சவாரிவிட்டு அப்பகுதியின் பெருமையாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

