கிருமாம்பாக்கத்தில் லாரி மோதி கடலுார் வாலிபர் உடல் பலி
கிருமாம்பாக்கத்தில் லாரி மோதி கடலுார் வாலிபர் உடல் பலி
ADDED : ஆக 15, 2026 07:41 PM
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் வண்டல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி பைக்கில் சென்ற கடலுார் வாலிபர் இறந்தார்.
கிருமாம்பாக்கம் ஏரியில் கடந்த சில நாட்களாக வண்டல் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. சிலர் இந்த மண்னை எடுத்து சென்று மொத்தமாக குவித்து வைத்து, முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதே நேரத்தில், தாறுமாறாக அதிவேகமாக செல்லும் மண் லாரிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ – மாணவிகளும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் வண்டல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி (டி.என்.46 எல் 7459) ஒன்று, கிருமாம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் திரும்ப முயன்றது. அவ்வழியாக வாலிபர் ஒருவர் வந்த பல்சர் பைக் மீது லாரி மோதியது. நிலை தடுமாறி விழுந்த வாலிபரின் மீது லாரியின் பின் சக்கரம் ஏரியது. படுகாயமடைந்த அந்த வாலிபரை பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இறந்த வாலிபர் கடலுார், திருபாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரை சேர்ந்த விஜயராகவன் மகன் அருண்ராஜ் கவுதம், 28, என்பது தெரியவந்தது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவர் குறித்தும், லாரியில் கொண்டு செல்லப்பட்ட மண் எங்கு எடுத்து செல்லப்படுகிறது. அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
