ADDED : ஆக 13, 2024 11:14 PM

புதுடில்லி: ''பயிற்சிக்காக ரூ. 1.5 கோடி பெற்றதாக கூறுவது அதிர்ச்சியாக உள்ளது,'' என அஷ்வினி பொன்னப்பா தெரிவித்துள்ளார்.
பிரான்சில் 33வது ஒலிம்பிம் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்கள் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) வெளியிட்டது.
இதன் படி, 'ஒலிம்பிக் பதக்கம் பெறும் நட்சத்திரங்களுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, பாட்மின்டன் வீராங்கனை அஷ்வினி பொன்னப்பாவுக்கு (இரட்டையர்) ரூ. 4.5 லட்சம் தரப்பட்டது. தவிர சர்வதேச போட்டிக்கு தயாராக, போக்குவரத்து, உணவு, தங்குமிடம், அவருடன் விளையாடி வீராங்கனைக்கு, என அஷ்வினிக்கு ரூ. 1.5 கோடி தரப்பட்டது,' என எஸ்.ஏ.ஐ., தெரிவித்து இருந்தது.
இதுகுறித்து அஷ்வினி கூறுகையில்,''பாட்மின்டன் பயிற்சிக்காக ரூ. 1.5 கோடி கொடுக்கப்பட்டது என கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. நான் பணம் பெறவே இல்லை. அனைத்து பயிற்சி முகாம்களுக்கு சேர்த்து தான் ரூ. 1.5 கோடி செலவிடப்படுகிறது. உண்மையை சரிபார்க்காமல் எப்படி இதுபோல பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு தான், ஒலிம்பிக் பதக்க திட்டத்துக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டேன்.
பயிற்சியாளர் இல்லாத நிலையில் பாரிசில் சிறப்பாக விளையாடவில்லை. இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் எவ்வித பணமும் பெறாத நிலையில், எனக்கு பணம் கொடுக்கப்பட்டது என யாரும் கூற முடியாது,'' என்றார்.

