/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
/
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
UPDATED : அக் 22, 2025 10:51 PM
ADDED : அக் 22, 2025 10:40 PM

அடிலெய்டு: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது. இதில் சிறப்பான திறமை வெளிப்படுத்தி இந்திய அணி முதல் வெற்றி பெற காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மழையால் பலமுறை பாதிக்கப்பட்ட, பெர்த் போட்டியில் இந்தியா தோற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
மீள்வாரா 'இருவர்'
ஏழு மாதத்துக்குப் பின் அணிக்கு திரும்பிய 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா (8), கோலி (0) என இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் முதல் போட்டியில் இருவரும் ஏமாற்றினர். ஜெய்ஸ்வால் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ரோகித்துக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. துவக்கத்தில் கேப்டன் சுப்மன் கில் (10), 'மிடில் ஆர்டரில்' ஷ்ரேயஸ் (11) மீண்டு வர வேண்டும். அக்சர் படேல் (31), ராகுல் (38) கைகொடுத்தாலும் பெரியளவு ஸ்கோர் எடுக்க முயற்சித்தால் நல்லது.
'ஆல் ரவுண்டர்' பலமா
பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்திய அணியில் 'ஆல் ரவுண்டர்களுக்கு' முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் நிதிஷ் குமார், வாஷிங்டன் மீண்டும் வாய்ப்பு பெறுவர். சுழலில் குல்தீப் இடம் பெறுவது சந்தேகம் தான். வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் கூட்டணி, விக்கெட் வேட்டை நடத்த வேண்டும்.
பேட்டிங் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (46 ரன்), டிராவிஸ் ஹெட் (8) கூட்டணி இம்முறை நல்ல துவக்கம் தர முயற்சிக்கலாம். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அணிக்கு திரும்பியது கூடுதல் பலம். தவிர பிலிப், ரென்ஷா, ஷார்ட் என அடுத்த தலைமுறை வீரர்கள், 2027 ஒருநாள் தொடருக்கு சிறப்பாக தயாராகி வருகின்றனர்.
வேகப்பந்து வீச்சில் ஹேசல்வுட் (2 விக்.,), மிட்சல் ஸ்டார்க் (1) என இரு சீனியர்களும், இந்தியாவுக்கு நெருக்கடி தருகின்றனர். முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதும் குனேமன் (2 விக்.,), இன்று அனுபவ ஜாம்பாவுக்கு வழிவிடலாம்.
மழை வருமா
அடிலெய்டில் வானம் இன்று பெரும்பாலும் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.
ஆடுகளம் எப்படி
அடிலெய்டு ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக 'பவுன்ஸ்' ஆகலாம். எனினும், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். பவுண்டரி எல்லை குறைவு என்பதால் பேட்டர்கள் ரன் மழை பொழியலாம்.
2008க்குப் பின்...
அடிலெய்டு மைதானத்தில் கடந்த 2008, பிப். 17ல் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதன் பின் இங்கு விளையாடிய 5 போட்டியில் இந்தியா 4ல் வெற்றி பெற்றது. 1 போட்டி (இலங்கை, 2012) 'டை' ஆனது.
* எதிராக 2008க்குப் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய இரு போட்டியிலும் (2012, 2019) இந்தியா வெற்றி பெற்றது.