ADDED : நவ 13, 2024 11:23 PM

தேனி: கூச் பெஹர் டிராபி லீக் போட்டியில் தமிழகத்தின் அபினவ் கண்ணன் சதம் விளாசினார்.
தேனி அருகே தப்புக்குண்டில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க கிரிக்கெட் மைதானத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹர் டிராபி 'சி' பிரிவு லீக் போட்டி நடக்கிறது. இதில் தமிழகம், கோவா அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற தமிழக அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு ஷ்ரெனிக், கேப்டன் அபினவ் கண்ணன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது ஷ்ரெனிக் (61) அவுட்டானார். அபாரமாக ஆடிய அபினவ், நடப்பு சீசனில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 135 ரன்னில் ஆட்டமிழந்தார். அக்சய் (37), ஜெயந்த் (27) ஓரளவு கைகொடுத்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்திருந்தது. கிஷோர் (6), தீபேஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். கோவா அணி சார்பில் சமர்த், அனுஜ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.