/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'கணக்கு புலி' ஸ்மிருதி மந்தனா: பிரதிகா புகழாரம்
/
'கணக்கு புலி' ஸ்மிருதி மந்தனா: பிரதிகா புகழாரம்
ADDED : அக் 24, 2025 09:26 PM

நவி மும்பை: ''அணிக்கு எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்று கணக்கிடுவதில் ஸ்மிருதி மந்தனா தலைசிறந்தவர்,'' என, இந்திய வீராங்கனை பிரதிகா தெரிவித்தார்.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி (340/3, 49 ஓவர்) 53 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் நியூசிலாந்தை (271/8, 44 ஓவர்) வீழ்த்தியது. ஆறு போட்டியில், 3 வெற்றி, 3 தோல்வி என, 6 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இப்போட்டியில் பேட்டிங்கில் அசத்திய இந்திய துவக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல் (122), ஸ்மிருதி மந்தனா (109) சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 212 ரன் குவித்தனர். ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி மந்தனா (109 ரன், 3 'கேட்ச்') வென்றார். ஒருநாள் போட்டி அரங்கில் ஸ்மிருதி-பிரதிகா ஜோடி, 23 இன்னிங்சில், 1799 ரன் சேர்த்துள்ளது.
இதுகுறித்து பிரதிகா கூறுகையில், ''ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து அணிக்கு நல்ல துவக்கம் கொடுப்பதில் மகிழ்ச்சி. போட்டியின் போது ஆடுகளத்தில், அணிக்கு எப்படி இமாலய ஸ்கோரை பெற்றுத் தருவது, எதிரணியின் இலக்கை எப்படி 'சேஸ்' செய்வது என பேட்டிங் தொடர்பாக மட்டும் பேசிக் கொள்வோம். ரன் குவிப்பது தொடர்பாக கணக்கிடுவதில் ஸ்மிருதி மந்தனா கெட்டிக்காரர்,'' என்றார்.

