/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வின் 500 * டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை
/
அஷ்வின் 500 * டெஸ்ட் அரங்கில் புதிய சாதனை
ADDED : பிப் 16, 2024 11:06 PM

ராஜ்கோட்: டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் சாய்த்து சாதனை படைத்தார் அஷ்வின். இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட், முதல் இன்னிங்கில் இந்திய அணி 445 ரன் குவித்தது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1--1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது.
'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 326 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா (110), குல்தீப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரன் குவிப்பு
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆண்டர்சன் 'வேகத்தில்' குல்தீப் (4) அவுட்டானார். மறுபக்கம் ஜோ ரூட் சுழலில் ஜடேஜா, 112 ரன்னுக்கு அவுட்டானார். அஷ்வின், துருவ் ஜோரல் இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். சர்வதேச டெஸ்டில் முதன் முறையாக களமிறங்கிய துருவ், உட் பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார்.
மறுபக்கம் ஆண்டர்சன், ரேஹன் பந்துகளை பவுண்டரி அனுப்பினார் அஷ்வின். தன்பங்கிற்கு உட், ஹார்ட்லே பந்துகளில் பவுண்டரி விளாசிய துருவ், ரேஹன் பந்தில் சிக்சர் அடித்தார். 8 வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது, அஷ்வின் 37 ரன் எடுத்தார். துருவ் ஜோரல் 46 ரன் எடுத்து, அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
'டெயிலெண்டர்' பும்ரா 28 பந்தில் 26 ரன் எடுத்து கைகொடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 4, ரேஹன் அகமது 2 விக்கெட் சாய்த்தனர்.
அஷ்வின் அபாரம்
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட், கிராலே ஜோடி முதல் 13 ஓவரில் 84 ரன் குவித்தது. இந்நிலையில் 14வது ஓவரை வீசினார் அஷ்வின். முதல் பந்தை ஜாக் கிராலே அடித்தார். 'ஷார்ட் பைன் லெக்' பகுதியில் உயரமாக சென்ற இந்த பந்தை, ரஜத் படிதர் 'கேட்ச்' செய்ய, டெஸ்ட் அரங்கில் அஷ்வின் தனது 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். கும்ளேவுக்கு (619) அடுத்து 500 விக்கெட் சாய்த்த இரண்டாவது இந்திய பவுலர் ஆனார்.
டக்கெட் சதம்
பின் டக்கெட், போப் இணைந்தனர். வேகமாக ரன் சேர்த்த டக்கெட், 39 வது பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்திய டக்கெட், 88 வது பந்தில் சதம் விளாசினார். மறுபக்கம் 'ஷார்ட் பிட்ச்' பந்துகளாக வீசிய சிராஜ், போப்பை (39) அவுட்டாக்கினார்.
இருப்பினும் இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவரில் 207/2 ரன் குவித்து, இந்தியாவுக்கு நெருக்கடி தந்துள்ளது. டக்கெட் (133), ரூட் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்னும் 238 ரன் மட்டும் பின் தங்கியுள்ள இங்கிலாந்தை இன்று விரைவாக வீழ்த்த இந்திய பவுலர்கள் முயற்சிக்க வேண்டும்.
பிரதமர் பாராட்டு
அஷ்வினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,''500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி வியக்கத்தக்க சாதனை படைத்த அஷ்வினுக்கு வாழ்த்துகள். திறமை, விடா முயற்சிக்கு இவரது சாதனை பயணம் தான் சான்று. தொடர்ந்து பல சாதனை படைக்க வாழ்த்துகிறேன்,'' என தெரிவித்துள்ளார்.
முதல் இந்தியர்
குறைந்த டெஸ்டில் 500 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் ஆனார் அஷ்வின் (98 போட்டி). இதற்கு முன் கும்ளே 105 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டினார்.
* சர்வதேச அரங்கில் இலங்கையின் முரளிதரன் (87) முதலிடத்தில் உள்ளார்.
* முரளிதரன், லியானுக்கு (ஆஸி.,) பின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது 'ஆப் ஸ்பின்னர்' என பெருமை பெற்றார்.
184
குறைந்த இன்னிங்சில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அஷ்வின் (184) இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் முரளிதரன் (144, இலங்கை) உள்ளார். கும்ளே (186), வார்ன் (201, ஆஸி.,) 3, 4வதாக உள்ளனர்.
25,714
டெஸ்டில் குறைந்த பந்தில் 500 விக்கெட் சாய்த்த பவுலர்களில் மெக்ராத்திற்கு (25,528) அடுத்த இடம் பிடித்தார் அஷ்வின். இவர் 25,714 வது பந்தில் இந்த இலக்கை அடைந்தார். இங்கிலாந்தின் ஆண்டர்சன் (28,150) மூன்றாவதாக உள்ளார்.
500... 3000
டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட் சாய்த்து, 3000 ரன்னுக்கும் மேல் எடுத்தவர்களில் அஷ்வின் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியாவின் வார்ன் (3154 ரன், 708 விக்.,), இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (3662, 604) உள்ளனர்.
எட்டியது எப்படி
விக்., வீரர்/அணி ஆண்டு
1 பிராவோ/வெ/இண்டீஸ் 2011
100 ஷமி/வெ.இண்டீஸ் 2013
200 வில்லியம்சன்/நியூசி., 2016
300 கமாகே/இலங்கை 2017
400 ஆர்ச்சர்/இங்கிலாந்து 2021
500 கிராலே/இங்கிலாந்து 2024
'டாப்-11' பவுலர்கள்
பவுலர்/அணி போட்டி விக்.,
முரளிதரன்/இலங்கை 133 800
வார்ன்/ஆஸி., 145 708
ஆண்டர்சன்/இங்கிலாந்து 185 696
கும்ளே/இந்தியா 132 619
பிராட்/இங்கிலாந்து 167 604
மெக்ராத்/ஆஸி., 124 563
வால்ஸ்/வெ.இண்டீஸ் 132 519
லியான்/ஆஸி., 127 517
அஷ்வின்/இந்தியா 98 500
ஸ்டைன்/தெ.ஆப்., 93 439
கபில்தேவ்/இந்தியா 131 434
'தார்' கார் பரிசு
இந்திய வீரர் சர்பராஸ் கான் 26. ராஜ்கோட் டெஸ்டில் அறிமுகம் ஆன இவர், 62 ரன் விளாசினார். இவரது பயிற்சியாளராக, தந்தை நவுஷாத் உள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட செய்தியில், 'கடின உழைப்பு, தைரியம், பொறுமை என ஒரு குழந்தையை உற்சாகப்படுத்தும் தந்தைக்கு, இதைவிட வேறென்ன குணங்கள் வேண்டும். ஒரு ஊக்கம் தரும் பெற்றோராக இருக்கும் நவுஷாத்தை கவுரவப்படுத்தும் வகையில், அவருக்கு 'தார்' கார் பரிசாக தர விரும்புகிறேன்,' என தெரிவித்துள்ளார்.
88
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிவேக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஆனார் டக்கெட். இவர் நேற்று 88 பந்தில் சதம் அடித்தார். முன்னதாக 1990ல் கிரகாம் கூச் 95 பந்தில் சதம் (லார்ட்ஸ்) அடித்து இருந்தார்.
* இந்திய மண்ணில் டெஸ்டில் அதிவேக சதம் அடித்த எதிரணி வீரர்களில் கில்கிறிஸ்ட் (84, ஆஸி.,), லாயிடுவுக்கு (85, பெங்களூரு), அடுத்து மூன்றாவது இடம் பிடித்தார் டக்கெட் (88 பந்து).