ADDED : அக் 01, 2025 07:33 PM

நாக்பூர்: இரானி கோப்பையில் விதர்பா அணியின் அதர்வா சதம் விளாசினார்.
'ரெஸ்ட் ஆப் இந்தியா', நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி (62வது சீசன்) நாக்பூரில் நடக்கிறது. 'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு அமன் (19), துருவ் ஷோரே (18), டேனிஷ் மலேவார் (0) ஏமாற்றினர். விதர்பா அணி 80 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறியது.
பின் இணைந்த அதர்வா, யாத் ரத்தோட் ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய அதர்வா சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரத்தோட் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 184 ரன் சேர்த்த போது ரத்தோட் (91) அவுட்டானார். கேப்டன் அக்சய் வாத்கர் (5) சோபிக்கவில்லை.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 280 ரன் எடுத்திருந்தது. அதர்வா (118), யாஷ் தாகூர் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் மானவ் சுதர் 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட் கைப்பற்றினர்.