UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 08:44 PM

லிங்கன்: நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 3வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில், இந்தியா ‘ஏ’ அணி சார்பில் பும்ரா, ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா சாதிக்க காத்திருக்கின்றனர்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் ‘டிரா’ ஆனது. இன்று, லிங்கனில் 3வது, கடைசி டெஸ்ட் துவங்குகிறது.
இப்போட்டியில் இந்தியா ‘ஏ’ அணிக்காக வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா களமிறங்க உள்ளனர். இவர்கள், அடுத்து நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் (நவ. 19–23ல் வெலிங்டன், நவ. 27 – டிச. 1ல் கிறைஸ்ட்சர்ச்) கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இப்போட்டியில் விளையாடுகின்றனர்.
கடைசியாக ஆசிய விளையாட்டில் பங்கேற்ற பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டி பும்ராவுக்கு சிறந்த பயிற்சியாக அமையலாம். தொடையின் பின்பகுதி காயத்தில் இருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா, கடைசியாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படாத ஜடேஜா, சமீபத்தில் 2 ரஞ்சி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடினார். இதில் ஒரு சதம், 7 விக்கெட் கைப்பற்றிய இவர், இந்தியா ‘ஏ’ அணிக்கும் கைகொடுக்கலாம்.
முதலிரண்டு டெஸ்டில் இந்தியா ‘ஏ’ அணிக்காக ரன் மழை பொழிந்த தேவ்தத் படிக்கல் (311 ரன்), யாஷ் ரத்தோட் (223), ஜெய்ஸ்வால் (177), சாய் சுதர்சன் (143), துருவ் ஜுரெல் (108) மீண்டும் அசத்தலாம். பவுலிங்கில் முகேஷ் குமார் (5 விக்கெட்), வாஷிங்டன் சுந்தர் (3), ஆகாஷ் தீப் (3) கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.
