/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அழைப்பு மறுப்பு: கவாஸ்கர் கொதிப்பு
/
அழைப்பு மறுப்பு: கவாஸ்கர் கொதிப்பு
ADDED : ஜன 05, 2025 11:19 PM

டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை, முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் (ஆஸி.,) வழங்கினார். அப்போது சிட்னி மைதான பவுண்டரிக்கு அருகே இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் சக வர்ணனையாளர் இர்பான் பதான் உடன் பேசிக் கொண்டிருந்தார். அவரை கோப்பை வழங்க மேடைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அழைக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கவாஸ்கர் கூறுகையில்,''ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பை வழங்குவதில் எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. மைதானத்தில் தான் இருந்தேன். கோப்பையின் பெயர் 'பார்டர்-கவாஸ்கர்' என்பதால், எனது நண்பர் ஆலன் பார்டர் உடன் கோப்பை வழங்கி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால், நான் ஒரு இந்தியர் என்பதால் அழைப்பு விடுக்கவில்லை,''என்றார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''தொடரை இந்தியா வென்றால் கவாஸ்கரும் ஆஸ்திரேலியா வென்றால் ஆலன் பார்டரும் கோப்பையை வழங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். இதன்படி கம்மின்சிடம் கோப்பையை வழங்கினார் பார்டர். இந்த விபரம் கவாஸ்கருக்கு தெரியாததால் கோபம் அடைந்திருக்கலாம்,''என்றார்.
கடந்த 2023ல் இந்தியா தொடரை வென்ற போது ஆமதாபாத்தில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் கவாஸ்கர் மட்டும் கோப்பையை ரோகித்திடம் வழங்கினார். அப்போது இந்தியாவில் ஆலன் பார்டர் இல்லை. தற்போது சிட்னி மைதானத்தில் கவாஸ்கர் இருந்தும், அவரை பரிசளிப்பு மேடைக்கு அழைக்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எங்கும் 'பிங்க்' நிறம்
ஆஸ்திரேலிய முன்னாள் 'வேகப்புயல்' மெக்ராத்தின் மனைவி ஜேன், மார்பக 'கேன்சரால்' 2008ல் காலமானார். இவரது நினைவாக அறக்கட்டளை நடத்துகிறார் மெக்ராத். இதற்கு நிதி திரட்டவும் 'கேன்சர்' விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நேற்று இந்தியா, ஆஸ்திரேலிய அணி வீரர்களின் ஜெர்சியில் 'பிங்க்' நிற கோடுகள், 'பிங்க்' நிறத்தில் 'நம்பர்' பொறிக்கப்பட்டு இருந்தன. வீரர்களிடம் இருந்து 'பிங்க்' (இளஞ்சிகப்பு) நிற தொப்பியை மெக்ராத் பெற்றுக் கொண்டார். இவை ஏலத்தில் விடப்பட்டு, நிதி திரட்டப்படும். ரசிகர்களும் 'பிங்க்' நிற உடை அணிந்து வந்திருந்ததால், சிட்னி மைதானமே 'பிங்க்' நிறமாக காட்சி அளித்தது.
கோலி பதிலடி
நேற்று பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' ஆஸ்திரேலியாவின் ஸ்மித் உள்ளிட்டோர் விரைவில் அவுட்டாகினர். உடனே அரங்கில் இருந்த ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். அப்போது எல்லை அருகே 'பீல்டிங்' செய்து கொண்டிருந்த கோலி தனது 'பேன்ட்' பாக்கெட்டை திறந்து 'ஒன்றும் இல்லை' என காண்பித்தார். 'பந்தை சேதப்படுத்தி விக்கெட் வீழ்த்தவில்லை' என்பது போல சைகை செய்து பதிலடி கொடுத்தார். கடந்த 2018ல் கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் போது ஆஸ்திரேலியாவின் பான் கிராப்ட், வார்னர், ஸ்மித் என மூவரும் 'சாண்ட் பேப்பரை' பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது அம்பலமானது. அப்போது இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தான் நேற்று மறைமுகமாக கோலி சுட்டிக்காட்டினார்.
சரிந்தது ஏன்
'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரை இம்முறை இந்திய அணி இழந்ததற்கு சொதப்பலான 'பேட்டிங்' முக்கிய காரணம். 7 இன்னிங்ஸ்களில், 200 ரன்னை எட்டவில்லை. ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. 'சீனியர்' ரோகித், கோலியின் மோசமான 'பார்ம்' தொடர்ந்தது. பந்துவீச்சில் பும்ரா மட்டும் 'ஒன் மேன் ஆர்மி' ஆக போராடினார். 32 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்டில் எழுச்சி பெற, இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.