/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலியை கேலி செய்தால்... * மேக்ஸ்வெல் ருசிகரம்
/
கோலியை கேலி செய்தால்... * மேக்ஸ்வெல் ருசிகரம்
ADDED : அக் 29, 2024 11:26 PM

மெல்போர்ன்: ''காயம் அடைந்த கோலியை கேலி செய்தேன். அதற்காக சமூகவலைதளத்தில் என்னை 'பிளாக்' செய்தார்,''என மேக்ஸ்வெல் தெரிவித்தார்.
இந்திய அணியின் சீனியர் பேட்டர் கோலியும் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெலும் நல்ல நண்பர்கள். 2021, ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக மேக்ஸ்வெல் ரூ. 14.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இது குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில்,'பெங்களூரு அணிக்கு என்னை முதல் ஆளாக வரவேற்றது கோலி தான். இருவரும் ஒன்றாக பயிற்சி செய்தோம். 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் கோலியை பின்தொடர விரும்பினேன். ஆனால், அவரது பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான காரணத்தை சிலரிடம் கேட்ட போது,'உங்களை 'பிளாக்' செய்திருப்பார்,' என தெரிவித்தனர்.
உடனே கோலியிடம்,'இன்ஸ்டாகிராமில் என்னை 'பிளாக்' செய்துள்ளீர்களா' என கேட்டேன். அதற்கு 'ஆம். 2017ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் 'பீல்டிங்' செய்த போது, வலது தோள்பட்டையில் காயம் அடைந்தேன். அப்போது வலியால் தோளில் கை வைத்தேன். இதே போல நடித்து, என்னை கேலி செய்தீர்கள். அதற்காக தான் உங்களை 'பிளாக்' செய்தேன்,'என்றார்.
'நீங்கள் செய்ததும் சரி தான்' என்றேன். சிறிது நேரத்தில் 'அன்பிளாக்' செய்தார். தற்போது 'இன்ஸ்டா' மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம். ஐ.பி.எல்., தொடரில் இருவரும் பெங்களூரு அணிக்காக ஒன்றாக விளையாடியது, 'டிரஸ்சிங் ரூம்' பகிர்ந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்,''என்றார்.