/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரன் மழையா... 'சுழல்' புயலா * இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எப்படி
/
ரன் மழையா... 'சுழல்' புயலா * இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எப்படி
ரன் மழையா... 'சுழல்' புயலா * இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எப்படி
ரன் மழையா... 'சுழல்' புயலா * இரண்டாவது டெஸ்ட் ஆடுகளம் எப்படி
ADDED : நவ 20, 2025 11:06 PM

கவுகாத்தி: கவுகாத்தியில் முதன் முறையாக நடக்கும் டெஸ்ட் போட்டியில் (நாளை) ரன் மழை வருமா அல்லது 'சுழல்' புயல் வீசுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி சமீபகாலமாக சொந்தமண்ணில் பங்கேற்கும் டெஸ்டில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடந்த 2011 முதல் 2023 வரை சொந்தமண்ணில் 5 டெஸ்டில் மட்டும் தோற்ற இந்தியா, கடைசியாக விளையாடிய 6 டெஸ்டில் 4ல் தோற்றது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பேட்டர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தில் இந்தியா வென்றது.
தற்போது தென் ஆப்ரிக்க தொடரிலும் இது தொடரும் என நம்பப்பட்டது. மாறாக, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என்றார் பயிற்சியாளர் காம்பிர். கடைசியில் இந்திய பேட்டர்கள் தடுமாற, முதல் டெஸ்டில் தோற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், கவுகாத்தி, பார்சபரா மைதானத்தில் நாளை துவங்குகிறது.
இம்மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் என்பதால், செம்மண்ணால் ஆன புதிய ஆடுகளம் எப்படி இருக்கும் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோல்கட்டாவில் பந்துகள் பெரும்பாலும் உயரம் குறைவாக சென்றன. ஆனால் கவுகாத்தியில் பந்துகள் 'பவுன்ஸ்' ஆக வேண்டும் என ஆடுகள பராமரிப்பாளர் ஆஷிஸ் போவ்மிக்கிடம், இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு நிலையில் ஆடுகளத்தில் லேசாக புற்கள் காணப்படுகின்றன. களிமண் போல, செம்மண் ஆடுகளத்தில் விரைவில் வெடிப்புகள் ஏற்படாது. பேட்டர்கள் ரன் சேர்க்கலாம். ஒருவேளை போட்டி துவங்கும் முன், புற்கள் 'டிரிம்' செய்யப்பட்டால், விரைவில் சுழலுக்கு சாதகமாக மாறிவிடும்.
பந்தில் அதிக திருப்பம் ஏற்பட்டாலும், அதேவேகத்தில் நன்றாக பவுன்ஸ் ஆகும். இது பேட்டர்களுக்கு சிரமமாக இருக்கும். எனினும் ஈடன் கார்டன் அளவுக்கு மோசமாக இருக்காது. தவிர, கவுகாத்தியில் நடக்கும் முதல் டெஸ்ட் என்பதால், மைதானம் குறித்து 'நெகட்டிவ் இமேஜ்' ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் போர்டு கவனமாக உள்ளது. இதனால் இரு அணிக்கும் சாதகமாக இருக்கும் வகையில் ஆடுகளம் தயாராகலாம்.
யாருக்கு இடம்
இதனிடையே நாளைய டெஸ்டில் சுப்மன் கில் இடத்தில், ஏற்கனவே 5 டெஸ்டில் விளையாடிய அனுபவம் கொண்ட, தமிழகத்தின் சாய் சுதர்சன் இடம் பெற வாய்ப்புள்ளது. தற்போது, 3வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்வதால், சுதர்சன் 6வது இடத்துக்கு தள்ளப்படலாம்.
ஆடுகளத்துக்கு ஏற்ப, சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' அக்சர் படேல் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' நிதிஷ் குமாருக்கு இடம் கிடைக்கலாம்.
ரிஷாப் கேப்டன்
கவுகாத்தியில் சுப்மன் விளையாடவில்லை எனில், ரிஷாப் பன்ட் 28, இந்தியாவின் 38 வது டெஸ்ட் கேப்டனாக களமிறங்குவார்.
சுப்மனுக்கு சோதனை
கோல்கட்டா டெஸ்டில் கழுத்து வலியால் சுப்மன் கில் 26, அவதிப்பட்டார். முழுமையாக மீண்டு வர குறைந்தது 10 நாள் தேவைப்படும். இன்று இவருக்கு, 'பிட்னஸ் டெஸ்ட்' நடக்க உள்ளது. இதன் முடிவுக்கு ஏற்ப, விளையாடுவது குறித்து தெரியவரும்.
ஒருவேளை கவுகாத்தியில் சுப்மன் களமிறங்கினால், அடுத்து வரும் ஒருநாள் தொடரில், ஓய்வு தரப்படலாம்.
திருப்பம் ஏற்படும்
இந்திய அணி முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா 48, கூறுகையில்,''கவுகாத்தி டெஸ்டில் ஆடுகளம் எப்படி இருக்கும் என யாருக்கும் எவ்வித 'ஐடியாவும்' இல்லை. ஆனால், பெண்கள் உலக கோப்பை தொடரில், இங்கு பந்துகளில் நன்றாக திருப்பம் ஏற்பட்டன. இது இரு அணிக்கும் சவாலாக இருக்கும். ஆனால், சொந்தமண்ணில் இதுபோன்ற ஆடுகளங்களில் தான், நாம் விளையாடி வந்துள்ளோம். இடம் வேறாக இருந்தாலும், இந்திய ஆடுகளம் தான். வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாட வேண்டும்,'' என்றார்.
திறக்குமா கண்கள்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,'' முதல் டெஸ்டில் அடைந்த தோல்வி, தேர்வாளர்கள் கண்களை திறக்கும் என நம்புகிறேன். உள்ளூர் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பக்கம் பார்வையை திருப்ப வேண்டும். ஏனெனில் பந்து எந்த இடத்தில் 'பிட்ச்' ஆகி, எப்படி வரும் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். தற்போது அணியிலுள்ள சர்வதேச வீரர்கள், அன்னிய மண்ணில் அதிகம் விளையாடுகின்றனர். உள்ளூர் ஆடுகளங்களில் விளையாடிய பயிற்சி போதியளவு இல்லை,'' என்றார்.

