/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஷஸ்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதல்
/
ஆஷஸ்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதல்
ADDED : நவ 20, 2025 10:38 PM

பெர்த்: ஆஸ்திரேலியாவை சமாளித்து ஆஷஸ் தொடரை வெற்றியுடன் துவக்க இங்கிலாந்து அணி காத்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பெர்த் மைதானத்தில் இன்று துவங்குகிறது.
ஸ்மித் கேப்டன்: சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸ்திரேலிய அணிக்கு பலம். 'ரெகுலர்' கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயத்தால் விளையாடாதது பின்னடைவு. அனுபவ ஸ்டீவ் ஸ்மித் 36, அணியை வழிநடத்துகிறார்.
அறிமுக வீரர் ஜாக் வெதரால்டு 31, உஸ்மான் கவாஜா ஜோடி துவக்கம் தர உள்ளது. மூன்றாவது இடத்தில் மார்னஸ் லபுசேன் களமிறங்குகிறார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமிரான் கிரீன், அலெக்ஸ் கேரி என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. வேகப்பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலந்து உள்ளனர். 'சுழலில்' நாதன் லியான் சாதிக்கலாம்.
ரூட் நம்பிக்கை: ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 15 டெஸ்டில் (2 'டிரா', 13 தோல்வி), ஒரு போட்டியில் கூட இங்கிலாந்து வென்றதில்லை. கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி துவக்கம் தருகிறது. போப், அனுபவ ஜோ ரூட், ஹாரி புரூக், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என, நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. 'வேகத்தில்' ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அட்கின்சன் சாதிக்கலாம். 'சுழலில்' சோயிப் பஷீர் கைகொடுக்கலாம்.
இதுவரை...
டெஸ்ட் அரங்கில் 361 முறை மோதிய போட்டியில், ஆஸ்திரேலியா 152, இங்கிலாந்து 112ல் வெற்றி பெற்றன. 97 டெஸ்ட் 'டிரா' ஆனது.
* ஆஷஸ் வரலாற்றில் இவ்விரு அணிகள் 345 டெஸ்டில் மோதின. இதில் ஆஸ்திரேலியா 142, இங்கிலாந்து 110ல் வென்றன. 93 டெஸ்ட் 'டிரா' ஆனது.
* ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 172 ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 90, இங்கிலாந்து 56ல் வெற்றி பெற்றன. 26 போட்டி 'டிரா' ஆனது.
* ஆஸ்திரேலியாவில் 36 முறை ஆஷஸ் தொடர் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 20, இங்கிலாந்து 14 முறை தொடரை கைப்பற்றி கோப்பை வென்றன. இரண்டு முறை தொடர் சமன் ஆனது.
இது வரலாறு
கடந்த 1882ல் லண்டன் ஓவல் டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுகுறித்து 'லண்டன் ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகை கேலியாக வெளியிட்ட செய்தியில்,'1882, ஆக., 29ல் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது. இதன் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் ('ஆஷஸ்') ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது,' என, மரண அஞ்சலி போல குறிப்பிட்டது.
பின், 1883ல் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி தொடரை 2--1 என வென்று பதிலடி கொடுத்தது. இத்தொடரின் மூன்றாவது டெஸ்டில் பயன்படுத்திய 'பெயில்ஸ்களை', சில பெண்கள் எரித்து, அதன் சாம்பலை(ஆஷஸ்) 6 அங்குல நீளமுள்ள மண்ணால் ஆன, கலசத்தில் போட்டு இங்கிலாந்து கேப்டன் பிளிக்கிடம் வழங்கினர். அன்று முதல் இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' என பெயர் வந்தது.
பழமையான ஆஷஸ் கோப்பை, லண்டனில் உள்ள மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் அருங்காட்சியகத்தில் உள்ளது. இதன் மாதிரியை தான் வீரர்கள் கையில் காணலாம். 1998--99ல் இருந்து வெற்றி பெறும் அணிக்கு 'கிரிஸ்டலில்' செய்யப்பட்ட ஆஷஸ் கலச மாதிரி கோப்பை வழங்கப்படுகிறது.

