/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இரண்டாவது வெற்றிக்கு இந்தியா 'ரெடி' * தென் ஆப்ரிக்காவுடன் இன்று மீண்டும் மோதல்
/
இரண்டாவது வெற்றிக்கு இந்தியா 'ரெடி' * தென் ஆப்ரிக்காவுடன் இன்று மீண்டும் மோதல்
இரண்டாவது வெற்றிக்கு இந்தியா 'ரெடி' * தென் ஆப்ரிக்காவுடன் இன்று மீண்டும் மோதல்
இரண்டாவது வெற்றிக்கு இந்தியா 'ரெடி' * தென் ஆப்ரிக்காவுடன் இன்று மீண்டும் மோதல்
ADDED : டிச 10, 2025 10:45 PM

முல்லன்புர்: இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது 'டி-20' போட்டி இன்று முல்லன்புரில் நடக்கிறது. முதல் போட்டி போல, இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு, இரண்டாவது வெற்றி பெற காத்திருக்கின்றனர்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி இன்று பஞ்சாப்பின் முல்லன்புரில் (புதிய சண்டிகர்) நடக்கிறது.
மீள்வாரா சுப்மன்
இந்திய அணிக்கு கழுத்து வலியில் இருந்து மீண்ட சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் தருகிறது. கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பின் 'டி-20' அணி துணை கேப்டனான சுப்மன், பெரியளவு சோபிக்கவில்லை. இருப்பினும் இவர் மீது, அணி நிர்வாகம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது.
கேப்டன் சூர்யகுமாரும் கடந்த 12 மாதங்களாக சீரற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். சொந்தமண்ணில் 'டி-20' உலக கோப்பை அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைக்க வேண்டிய நிலையில், சூர்யகுமார் எழுச்சி பெற்றால் நல்லது.
'மிடில் ஆர்டரில்' திலக் வர்மா, காயத்தில் இருந்து மீண்டு, ஆட்டநாயகனாக ஜொலித்த 'ஆல் ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா (28 பந்து, 59 ரன், 1 விக்.,) இருப்பது பெரும் பலம். தவிர ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, அக்சர் படேலும் ரன் சேர்க்க உதவ வேண்டும்.
அர்ஷ்தீப் நம்பிக்கை
வேகப்பந்து வீச்சில் பும்ரா (2 விக்.,), அர்ஷ்தீப் (2) கூட்டணி நம்பிக்கை தருகிறது. 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே (1) தன் பங்கிற்கு உதவுகிறார். சுழலில் வருண் சக்ரவர்த்தி (2), அக்சர் படேல் (2) கைகொடுக்கின்றனர்.
தவிர, முதல் போட்டியில் வென்றதால், அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது. இதனால் குல்தீப் யாதவ் இடம் பெறுவது மீண்டும் சந்தேகம் தான்.
அனுபவ பேட்டிங்
கடந்த 'டி-20' உலக கோப்பை பைனல், முதல் போட்டி என அடுத்தடுத்த 'டி-20' போட்டியில் இந்தியாவிடம் தோற்ற சோகத்தில் உள்ளது தென் ஆப்ரிக்கா.
இம்முறை 74 ரன்னுக்கு சுருண்டு தோற்ற விரக்தியில் உள்ளது. எனினும், என்ன நடந்தது, எப்படி நடந்தது என திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாத நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் பங்கேற்கிறது.
கேப்டன் மார்க்ரம், பிரவிஸ், குயின்டன், 'கில்லர்' மில்லர், யான்சென் உள்ளிட்ட அனுபவ வீரர்கள், இன்று விளாச முயற்சிக்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் யான்சென், நிகிடி, சிபம்லா, நோர்க்கியா கைகொடுக்கலாம். சுழலில் கேஷவ் மஹாராஜ் உள்ளார்.
ஆடுகளம் எப்படி
பிரிமியர் தொடரின் போது முல்லன்புரில் போட்டிகள் நடந்தன. இங்கு பேட்டிங் செய்வது எளிதல்ல. அதிகபட்சம் 228, குறைந்த பட்சம் 95 ரன் அடிக்கப்பட்டன.
* சர்வதேச 'டி-20' முதன் முறையாக இங்கு நடக்க உள்ளது.
யுவராஜ், ஹர்மன்பிரீத் 'கவுரவம்'
முல்லன்புர் மைதானத்தில் உள்ள கேலரிக்கு, இன்று 2011 உலக கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங், இந்திய பெண்கள் அணிக்கு முதல் உலக கோப்பை வென்று தந்த ஹர்மன்பிரீத் கவுர் பெயர் சூட்டப்பட உள்ளது.

