/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து அபார வெற்றி * வெலிங்டன் டெஸ்டில்...
/
நியூசிலாந்து அபார வெற்றி * வெலிங்டன் டெஸ்டில்...
ADDED : டிச 12, 2025 07:01 PM

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 205 ரன் எடுத்தது. நியூசிலாந்து 278/9 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 32/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கி இருந்தது.
டபி 'ஐந்து'
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரண்டன் கிங் 22 ரன்னில் அவுட்டானார். ஷாய் ஹோப் (5), கேப்டன் ராஸ்டன் சேசை (2), ஜேக்கப் டபி வெளியேற்றினார். போராடிய கிரீவ்ஸ் 25 ரன்னில், டபி வேகத்தில் சிக்கினார். தொடர்ந்து மிரட்டிய டபி, இம்லச் (5), ஓஜாயை (9) திருப்பி அனுப்பினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 128 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் டபி 5, மைக்கேல் 3 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து 56 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது நியூசிலாந்து. கேப்டன் டாம் லதாம் 9 ரன்னில் அவுட்டானார். கான்வே (28), வில்லியம்சன் (16) இணைந்து அவுட்டாகாமல், அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 57/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது, கடைசி டெஸ்ட், டிச. 18ல் மவுன்ட் மவுன்கனுயில் துவங்க உள்ளது.

