ADDED : நவ 09, 2026 04:10 AM

அல் அமராத்: ஆசிய கோப்பை (19 வயது) லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஓமனில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது.
மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக, லீக் முறையில் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மலேசியா அணிகள் இடம் பெற்றுள்ளன.
நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு கேப்டன் லக்சயா (0), வினீத் (8), யாஷ்பரதன் சவுகான் (1) ஏமாற்றினர். ஆர்யவிர் சேவக் (22), அன்வய் டிராவிட் (10), மனாய் சவுகான் (11) சோபிக்கவில்லை. தனிநபராக அசத்திய அர்ஜுன் ராஜ்புத், 85 பந்தில், 107 ரன் (5X6, 11X4) விளாசினார். காவ்யா பரேஷ் படேல் (23) ஆறுதல் தந்தார்.
இந்திய அணி 46.3 ஓவரில் 208 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 14.4 ஓவரில் 61/5 ரன் எடுத்து திணறியது. ஹம்சா ஜாகூர் (100*) சதம் விளாச, பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 209/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் மனாய் சவுகான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா, நாளை நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது. இதில் வென்றால் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யலாம்.
