/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து: பெண்கள் உலக கோப்பையில்
/
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து: பெண்கள் உலக கோப்பையில்
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து: பெண்கள் உலக கோப்பையில்
ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து: பெண்கள் உலக கோப்பையில்
ADDED : அக் 22, 2025 10:14 PM

இந்துார்: உலக கோப்பை லீக் போட்டியில் ஆஷ்லி கார்ட்னர் சதம் கடந்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்துாரில் (ம.பி.,) உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி, 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு அமி ஜோன்ஸ் (18), ஹீதர் நைட் (20) சோபிக்கவில்லை. கேப்டன் நாட் சிவர்-புருன்ட் (7), எம்மா லாம்ப் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அபாரமாக ஆடிய டாமி பியூமன்ட் (78) அரைசதம் கடந்தார். சோபியா டங்க்லி (22), ஆலிஸ் கேப்சி (38), சார்லி டீன் (26) ஓரளவு கைகொடுத்தனர்.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 244 ரன் எடுத்தது. சோபி எக்லெஸ்டோன் (10), லாரன் பெல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அனாபெல் சுதர்லாந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு லிட்ச்பீல்டு (1), ஜார்ஜியா (6), எல்லிஸ் பெர்ரி (13) ஏமாற்றினர். பெத் மூனே (20) நிலைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 17 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 69 ரன் எடுத்து தடுமாறியது. பின் இணைந்த அனாபெல் சுதர்லாந்து, ஆஷ்லி கார்ட்னர் ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய அனாபெல் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஆஷ்லி கார்ட்னர் சதம் விளாசினார். இவர்களை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். எக்லெஸ்டோன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கார்ட்னர், வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 40.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 248 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்ட்னர் (104), அனாபெல் (98) அவுட்டாகாமல் இருந்தனர். இதுவரை விளையாடிய 6 போட்டியில், 5ல் வென்ற ஆஸ்திரேலியா 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.