/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஹாரி புரூக் விளாசல் சதம் வீண்: நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
/
ஹாரி புரூக் விளாசல் சதம் வீண்: நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
ஹாரி புரூக் விளாசல் சதம் வீண்: நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
ஹாரி புரூக் விளாசல் சதம் வீண்: நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
ADDED : அக் 26, 2025 11:33 PM

மவுன்ட் மவுன்கனுய்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 56/6 என தவித்தது. தனிநபராக போராடிய கேப்டன் ஹாரி புரூக், 11 சிக்சருடன் 135 ரன் விளாசி வியக்க வைத்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் தயக்கத்துடன் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் சரிவு: இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே அதிர்ந்தது. மாட் ஹென்றி வீசிய முதல் பந்தில் ஜேமி ஸ்மித் (0) போல்டானார். பால்க்ஸ் வீசிய அடுத்த ஓவரில் டக்கெட் (2), ஜோ ரூட் (2) அவுட்டாக, 3 விக்கெட்டுக்கு 5 ரன் எடுத்து தவித்தது. இக்கட்டான தருணத்தில் 5வது வீரராக ஹாரி புரூக் களமிறங்கினார். பெத்தல் (2), பட்லர் (4), சாம் கர்ரான் (6) விரைவில் நடையை கட்ட, 11.3 ஓவரில் 56/6 என தத்தளித்தது. ஓவர்டன் 'கம்பெனி' கொடுக்க, தனி நபராக புரூக் மிரட்டினார். டபி ஓவரில் ஓவர்டன் (46), கார்ஸ் (0) வெளியேற, 26 ஓவரில் 143/8 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
2வது சதம்: மனம் தளராத புரூக் மட்டும் ரன் மழை பொழிந்தார். டபி ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசி, ஒருநாள் அரங்கில் 2வது சதம் அடித்தார். ஹென்றி ஓவரிலும் 3 சிக்சர் அடித்தார். சான்ட்னர் 'சுழலில்' புரூக், 135 ரன்னுக்கு (101 பந்து, 9x4, 11x6) அவுட்டானார். இங்கிலாந்து அணி 35.2 ஓவரில் 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
மிட்சல் அரைசதம்: சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் (5), வில்லியம்சன் (0), ரச்சின் ரவிந்திரா ஏமாற்ற, 4.2 ஓவரில் 24/3 ரன் எடுத்து தவித்தது. பின் டேரில் மிட்சல், லதாம் (24), பிரேஸ்வெல் (51), கேப்டன் சான்ட்னர் (27) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி 36.4 ஓவரில் 224/6 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சல் (78 ரன், 91 பந்து, 7x4, 2x6) அவுட்டாகாமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் சதம் வீணான போதும், ஆட்டநாயகன் விருதை வென்று ஆறுதல் தேடினார்.
இது அதிகம்
ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் மொத்த ஸ்கோரில் (223) அதிக சதவீத (60.53) ரன் எடுத்து ஹாரி புரூக் (135) சாதனை படைத்தார். இதற்கு முன் ராபின் ஸ்மித் (167 ரன், 60.28 %, 277/5, எதிர், ஆஸி., 1993, பர்மிங்ஹாம்) அசத்தி இருந்தார்.
* ஒருநாள் அரங்கில் அதிக சதவீத ரன் எடுத்த கேப்டன் வரிசையில் இந்தியாவின் கபில் தேவ் (175*, 65.78%, 266/8, எதிர், ஜிம்பாப்வே, 1983, டன்பிரிட்ஜ் வெல்ஸ்), இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு (189* 63.21%, 299/5, எதிர், இந்தியா, சார்ஜா, 2000) அடுத்து புரூக் (60.53) மூன்றாவது இடம் பிடித்தார்.

