/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி கோப்பை: பிரதோஷ் இரட்டை சதம்
/
ரஞ்சி கோப்பை: பிரதோஷ் இரட்டை சதம்
ADDED : அக் 26, 2025 11:25 PM

பெங்களூரு: பிரதோஷ் இரட்டை சதம் விளாச, தமிழக அணி முதல் இன்னிங்சில் 512 ரன் குவித்தது.
பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., சிறப்பு மைய மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 399/2 ரன் எடுத்திருந்தது. பிரதோஷ் (156), சித்தார்த் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆன்ட்ரி சித்தார்த் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்த போது சித்தார்த் (65) அவுட்டானார். அபாரமாக ஆடிய பிரதோஷ் ரஞ்சன் பால், முதல் தர போட்டியில் முதன்முறையாக இரட்டை சதம் விளாசினார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 512 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பிரதோஷ் (201), பாபா இந்திரஜித் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.
குர்ஜப்னீத் 'ஹாட்ரிக்': பின் முதல் இன்னிங்சை துவக்கிய நாகலாந்து அணிக்கு, குர்ஜப்னீத் சிங் தொல்லை தந்தார். 'வேகத்தில்' மிரட்டிய இவர், ருபேரோ (6), ஹெம் செத்ரி (0), கேப்டன் ரோங்சென் ஜோனாதனை (0) வரிசையாக அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார். தேகா நிஸ்கல், யுகந்தர் சிங் அரைசதம் கடந்தனர்.
ஆட்டநேர முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 150/4 ரன் எடுத்து, 362 ரன் பின்தங்கி இருந்தது. நிஸ்கல் (80), யுகந்தர் (58) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் கைப்பற்றினார்.

