தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஐ.சி.சி., இளம் தலைவர் ஜெய் ஷா

ஐ.சி.சி., இளம் தலைவர் ஜெய் ஷா

ஐ.சி.சி., இளம் தலைவர் ஜெய் ஷா


ADDED : டிச 01, 2024 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2024 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., புதிய தலைவராக பொறுப்பேற்றார் ஜெய் ஷா.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைவராக இருந்த நியூசிலாந்தின் கிரெக் பர்க்கிளேயின் பதவிக் காலம் முடிந்தது. புதிய ஐ.சி.சி., தலைவராக ஜெய் ஷா 36, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஐ.சி.சி., இளம் தலைவர் என்ற பெருமையை பெற்றார். ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், சஷாங்க் மனோகர், சீனிவாசனுக்கு பிறகு ஐ.சி.சி., தலைவரான ஐந்தாவது இந்தியரானார்.

நிர்வாகத்தில் ஆர்வம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷாவுக்கு, கல்லுாரி பருவத்தில் இருந்தே கிரிக்கெட் நிர்வாகத்தில் ஆர்வம் அதிகம். 2009ல் ஆமதாபாத் கிரிக்கெட் சங்க செயற்குழு உறுப்பினரானார். 2013ல் குஜராத் கிரிக்கெட் சங்க இணை செயலரானார். ஆமதாபாத்தில் உலகின் பெரிய மோடி கிரிக்கெட் மைதானம் உருவாக காரணமாக இருந்தார். 2019ல் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலரானார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர், ஐ.சி.சி., நிதி, வர்த்தக கமிட்டி தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்தார்.

புதிய சவால்: தற்போது ஐ.சி.சி., தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஜெய் ஷாவுக்கு நிறைய சவால்கள் உள்ளன. வரும் 2025ல் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி பிரச்னைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்த நிலையில், சர்ச்சை நீடிக்கிறது.

ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில்,'லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக்கில் 'டி-20' போட்டி இடம் பெறுகிறது. இதற்கு தயாராகி வருகிறோம். கிரிக்கெட்டை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு செல்வதே இலக்கு. மூன்றுவித போட்டிக்கு மத்தியில், பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம். உலகளவில் கிரிக்கெட் பிரபலம் அடைய பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஐ.சி.சி., உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து கிரிக்கெட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்,'என தெரிவித்துள்ளார்.

அடுத்து யார்...

புதிய பி.சி.சி.ஐ., செயலர் பதவிக்கு ஐ.பி.எல்., சேர்மன் அருண் துமால், பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா, பொருளாளர் அஷிஷ் ஷீலர், இணை செயலர் தேவஜித் லான் சைகியா, டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி பெயர்கள் அடிபடுகின்றன. புதிய செயலர் தேர்வு செய்யப்படும் வரை, ஐ.சி.சி., கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக பி.சி.சி.ஐ., தலைவர் ரோஜர் பின்னி அல்லது துணை தலைவர் ராஜிவ் சுக்லா பங்கேற்பர்.



சாதனை ஏராளம்

கடந்த ஐந்து ஆண்டுகள் பி.சி.சி.ஐ., செயலராக ஜெய் ஷா சிறப்பாக செயல்பட்டார். ஐ.பி.எல்., ஒளிபரப்பு மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 48,390 கோடி வருமானம் கிடைக்க செய்தார். இந்தியாவில் பெண்கள் பிரிமியர் லீக் துவக்கியது, 2023ல் உலக கோப்பை தொடரை (50 ஓவர்) நடத்தியது, 2024ல் இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வெல்ல ஊக்கம் கொடுத்தது, வீரர், வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரி பரிசுத் தொகை, நட்சத்திர வீரர்களும் உள்ளூர் போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும், டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுத்தது என பல பணிகளை வெற்றிகரமாக செய்தார். ரஞ்சியை புறக்கணித்து ஐ.பி.எல்., தொடருக்கு முன்னுரிமை அளித்த ஸ்ரேயாஸ், இஷான் கிஷானை பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கி, நடவடிக்கை எடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us