UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 09:37 PM

லின்கன்: இந்தியா, நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், லின்கனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ 113, நியூசிலாந்து ‘ஏ’ 317 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் இந்திய ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சில் 488/8 ரன் எடுத்து, 284 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வாஷிங்டன் 52 ரன்னில் அவுட்டாக, இந்திய ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சில் 516 ரன் குவித்து, 312 ரன் முன்னிலை பெற்றது.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து ‘ஏ’ அணி 13/3 என திணறியது. மழை காரணமாக போட்டி தாமதம் ஆனது. மீண்டும் துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து ‘ஏ’ அணி, தேநீர் இடைவேளையின் போது, 174/9 ரன் எடுத்து, தள்ளாடியது.
ஒருகட்டத்தில் 187/9 ரன் எடுத்து, 125 ரன் பின்தங்கி இருந்தது.
ஹீபை (90), லெனாக்ஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக, போட்டி நிறுத்தப்பட, இந்திய அணியின் வெற்றி பறிபோனது. அகிப் நபி 3, தேவ்தத் படிக்கல் 2 விக்கெட் சாய்த்தனர்.
