/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஏ' அணி தடுமாற்றம்: ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்
/
இந்தியா 'ஏ' அணி தடுமாற்றம்: ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்
இந்தியா 'ஏ' அணி தடுமாற்றம்: ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்
இந்தியா 'ஏ' அணி தடுமாற்றம்: ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம்
ADDED : நவ 02, 2024 09:41 PM

மக்கே: முதல் டெஸ்டில் இந்தியா 'ஏ' அணி பவுலர்கள் தடுமாற, ஆஸ்திரேலியா 'ஏ' அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (4 நாள் போட்டி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மக்கே நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 'ஏ' 107, ஆஸ்திரேலியா 'ஏ' 195 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 208/2 ரன் எடுத்திருந்தது. சுதர்சன் (96), படிக்கல் (80) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணிக்கு சாய் சுதர்சன் (103) சதம் கடந்தார். தேவ்தத் படிக்கல் 88 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபா இந்திரஜித் (6), நிதிஷ் குமார் ரெட்டி (17) ஏமாற்றினர். இஷான் கிஷான் (32) ஓரளவு கைகொடுத்தார். இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 312 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' சார்பில் பெர்கஸ் ஓ'நீல் 4 விக்கெட் சாய்த்தார்.
பின் 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு மார்கஸ் ஹாரிஸ் (36) கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி 139/3 ரன் எடுத்திருந்தது. கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி (47), பியூ வெப்ஸ்டர் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா 'ஏ' அணியின் வெற்றிக்கு 86 ரன் மட்டும் தேவைப்படுகிறது. கடைசி நாளில் (நவ.3) இந்தியா 'ஏ' பவுலர்கள் எழுச்சி கண்டால் வெற்றி பெற முயற்சிக்கலாம்.