‘ஹாட்ரிக்’ வெற்றி நோக்கி இந்தியா: ஜிம்பாப்வே அணியுடன் கடைசி மோதல்
‘ஹாட்ரிக்’ வெற்றி நோக்கி இந்தியா: ஜிம்பாப்வே அணியுடன் கடைசி மோதல்
UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 05:14 PM

ராய்ப்பூர்: இந்தியா, ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் மோதும் 3வது ‘டி–20’ போட்டி இன்று நடக்கிறது. இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் 3வது, கடைசி போட்டி நடக்கிறது.
நிக்கி நம்பிக்கை
முதல் போட்டியில் பேட்டிங்கில் ஏமாற்றிய இந்திய கேப்டன் ஸ்மிருதி மந்தனா (9, 47* ரன்), ஷபாலி வர்மா (4, 55) ஜோடி 2வது போட்டியில் எழுச்சி கண்டது. இன்றும் அசத்தினால் இந்தியாவுக்கு மீண்டும் நல்ல துவக்கம் கிடைக்கும். காயத்தால் விலகிய ஜெமிமா ரோட்ரிக்சிற்கு பதிலாக 3வது இடத்தில் களமிறங்கும் அனுஷ்கா சர்மா (4, 1*), வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ தீப்தி சர்மா (49 ரன்), நிக்கி பிரசாத் (39) நம்பிக்கை தருகின்றனர். முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.
‘வேகத்தில்’ நந்தினி சர்மா (3), கிராந்தி கவுட் (2 விக்கெட்), அருந்ததி ரெட்டி (1) கைகொடுக்கின்றனர். ‘சுழலில்’ ஸ்ரீசரணி (2), நிக்கி பிரசாத் (2), தீப்தி சர்மா (1) பலம் சேர்க்கின்றனர். இந்திய வீராங்கனைகள் மீண்டும் ஜொலித்தால் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறலாம்.
ஜிம்பாப்வே அணிக்கு பேட்டிங்கில் கெலிஸ் (42 ரன்) ஷார்ன் மேயர்ஸ் (43*), சிபோ முகேரி–திரிபானோ (34), கேப்டன் ஜோஸ்பின் நிகோமோ (27*) ஆறுதல் தருகின்றனர். பவுலிங்கில் நியாஷா குவான்சுரா (3 விக்.,), பிசா (2), மாவுங்கா (1), ஒலிண்டர் (1) கைகொடுத்தால் ஆறுதல் வெற்றி பெறலாம்.
