/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கட்டாய வெற்றி நோக்கி சென்னை * கைகொடுப்பரா இளம் வீரர்கள்
/
கட்டாய வெற்றி நோக்கி சென்னை * கைகொடுப்பரா இளம் வீரர்கள்
கட்டாய வெற்றி நோக்கி சென்னை * கைகொடுப்பரா இளம் வீரர்கள்
கட்டாய வெற்றி நோக்கி சென்னை * கைகொடுப்பரா இளம் வீரர்கள்
ADDED : ஏப் 24, 2025 10:44 PM

சென்னை: பிரிமியர் தொடரில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் தோனியின் சென்னை அணி, கம்மின்ஸ் கேப்டனாக உள்ள ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.
பிரிமியர் தொடரில் ஐந்து முறை கோப்பை வென்ற அணி சென்னை. தற்போது 8 போட்டியில் 2ல் மட்டும் வென்று (6 தோல்வி) 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
வழக்கமாக சொந்தமண்ணில் நடக்கும் போட்டிகளில் சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி பெறும் சென்னை அணி இம்முறை, ஆடுகளத்தை துல்லியமாக கணிக்க முடியாமல் திணறுகிறது.
இங்கு, மும்பையை வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக துவக்கிய போதும், அடுத்த 3 போட்டியில் தொடர்ந்து தோற்றது. கோல்கட்டாவுக்கு எதிராக சொந்தமண்ணில் குறைந்த ஸ்கோரை (103/9) பதிவு செய்தது. வெளியூர்களில் இதுவரை ஒன்றில் தான் (4 போட்டி) வென்றது.
தோனி நம்பிக்கை
பேட்டிங்கில் பெரிதும் தடுமாறும் சென்னை அணிக்கு 'ரெகுலர்' கேப்டன் ருதுராஜ் காயத்தால் விலகியது கூடுதல் 'ஷாக்'. இருப்பினும் தோனி கேப்டன் பொறுப்பேற்றது நம்பிக்கை தருகிறது. முழங்கால் தொல்லை இருந்தாலும், பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவது, பந்துவீச்சில் செய்யும் மாற்றங்கள், இவரது கடைசி கட்ட பேட்டிங் என அனைத்தும் அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு திருப்பும் என நம்பலாம்.
17 வயது வீரர் ஆயுஸ் மாத்ரே, தென் ஆப்ரிக்காவின் டிவால்ட் பிரவிஸ் பேட்டிங்கில் கைகொடுக்க வேண்டும். துவக்கத்தில் இளம் வீரர் ஷேக் ரஷீத் (2ல் 46 ரன்), ரச்சின் ரவிந்திரா (8ல் 191) மீண்டும் நம்பிக்கை தர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' ஜடேஜா (145), ஷிவம் துபே (230) கடந்த போட்டியில் அரைசதம் அடித்தாலும், ரன் வேகத்தை அதிகரித்தாக வேண்டும்.
பவுலிங்கில் நுார் அகமது (12 விக்.,) 'சுழல்', கலீல் அகமது (11) 'வேகம்' மட்டும் அணிக்கு கைகொடுக்கிறது. பதிரானாவின் (6ல் 7 விக்.,) ஏமாற்றம் அணிக்கு சிக்கலாக உள்ளது. ஜடேஜாவும் (5) விக்கெட் வேட்டைக்கு திரும்பினால் நல்லது.
சீரற்ற நிலை
ஐதராபாத் அணியும் முதல் போட்டியில் வென்றது. அடுத்த 4ல் தோற்ற இந்த அணி, இதுவரை 8ல் 2 வெற்றி மட்டும் பெற்றுள்ளது. அதிரடியாக ரன் சேர்க்கும் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் (8ல் 242 ரன்), அபிஷேக் சர்மா (240) இம்முறை சீரற்ற பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர். இந்த இருவரை மட்டும் நம்பி, பேட்டிங் வரிசை இருப்பது அணியின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
இஷான் கிஷான் முதல் போட்டியில் சதம் அடித்த பின், கடைசி 7 போட்டியில் 33 ரன் தான் எடுத்துள்ளார். கிளாசன் (281) நம்பிக்கை தருகிறார். பவுலிங்கில் ஹர்ஷல் படேல் (9 விக்.,), கேப்டன் கம்மின்ஸ் (7), ஈஷான் மலிங்கா (5) சற்று உதவுகின்றனர்.
'பிளே ஆப்' யாருக்கு
ஐதராபாத் (9), சென்னை (10) என இரு அணிகளும் தலா 8 போட்டியில் 2ல் மட்டும் வென்று, 4 புள்ளியுடன் பட்டியலில் கடைசி இரு இடத்தில் உள்ளன. மீதமுள்ள 6 போட்டியில் வென்றால் தலா 16 புள்ளி பெற்று, 'பிளே ஆப்' வாய்ப்பை தக்க வைக்கலாம். ஆனால் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. இதில் தோற்கும் அணி 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்து விடும்.