/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பட்லர் 'சரவெடி'... குஜராத் ஜோர் * வீழ்ந்தது டில்லி அணி
/
பட்லர் 'சரவெடி'... குஜராத் ஜோர் * வீழ்ந்தது டில்லி அணி
பட்லர் 'சரவெடி'... குஜராத் ஜோர் * வீழ்ந்தது டில்லி அணி
பட்லர் 'சரவெடி'... குஜராத் ஜோர் * வீழ்ந்தது டில்லி அணி
ADDED : ஏப் 19, 2025 11:31 PM

ஆமதாபாத்: ஜோஸ் பட்லர், 97 ரன் விளாச, குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
ஆமதாபாத் மோடி மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கிருஷ்ணா மிரட்டல்
டில்லி அணிக்கு அபிஷேக் போரல் அதிரடி துவக்கம் தந்தார். சிராஜ் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். போரல், 18 ரன் எடுத்தார். பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' ராகுல் (28), கருண் நாயர் (31) வெளியேறினர். சிராஜ் பந்தில் ஸ்டப்ஸ் (31) வீழ்ந்தார். அர்ஷத் கான் பந்தில் ஒரு ரன்னுக்கு ஓடிய அக்சர் படேலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேர சிகிச்சைக்கு பின் ஆட்டத்தை தொடர்ந்தார். மீண்டும் பந்துவீச வந்த பிரசித் கிருஷ்ணா வரிசையாக அக்சர் (39), விப்ராஜை (0) அவுட்டாக்கி திருப்புமுனை ஏற்படுத்தினார். அஷுதோஷ், 37 ரன் எடுத்தார். முன்னணி பேட்டர்கள் ஒருவர் கூட அரைசதம் அடிக்காததால், பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. டில்லி அணி 20 ஓவரில் 203/8 ரன் எடுத்தது.
குஜராத் சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (7), ரன் அவுட்டாகி ஏமாற்றினார். பின் தமிழகத்தின் சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் சேர்ந்து டில்லி பந்துவீச்சை சிதறடித்தனர். குல்தீப் 'சுழலில்' சுதர்சன் (36) சிக்கினார். ஸ்டார்க் ஓவரில் (15வது), பட்லர் தொடர்ந்து 5 பவுண்டரி அடிக்க, 20 ரன் எடுக்கப்பட்டன. ஷெர்பேன் ரூதர்போர்டு, 43 ரன் எடுத்தார்.
நழுவிய சதம்
குஜராத் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட்டன. தொடையில் ஏற்பட்ட பிடிப்பை பொருட்படுத்தாமல் துணிச்சலாக ஆடிய பட்லர், 97 ரன் எடுத்திருந்தார். ஸ்டார்க் பந்துவீசினார். முதல் இரு பந்துகளில் டிவாட்யா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, பட்லரின் சதம் அடிக்கும் கனவு தகர்ந்தது. குஜராத் அணி 19.2 ஓவரில் 204/3 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் பட்லர், 97 (11x4, 4x6), டிவாட்யா, 11 அவுட்டாகாமல் இருந்தனர்.
சிறந்த 'சேஸ்'
பிரிமியர் அரங்கில் நேற்று அதிகபட்ச ரன்னை சேஸ் செய்தது குஜராத் அணி (204). இதற்கு முன் 198 ரன் (எதிர், பெங்களூரு, 2023) 'சேஸ்' செய்திருந்தது.
* டில்லிக்கு எதிராக அதிகபட்ச ரன்னை சேஸ் செய்த அணியானது குஜராத் (204). முன்னதாக சென்னை அணி 188 ரன் (2008) 'சேஸ்' செய்தது.
ராகுல் 200 'சிக்சர்'
நேற்று சிராஜ் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் டில்லி அணியின் ராகுல். இதன் மூலம் பிரிமியர் அரங்கில் அதிவேகமாக 200 சிக்சர் (129 இன்னிங்ஸ்) அடித்த இந்திய வீரரானார். சாம்சன் (159 இன்னிங்ஸ்) சாதனையை தகர்த்தார். சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (69 இன்னிங்ஸ்), ரசலுக்கு (97) அடுத்து 3வது வீரரானார். பிரிமியர் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் 11வது இடம் பெற்றார் ராகுல். முதலிடத்தில் கெய்ல் (357 சிக்சர், 142 போட்டி) உள்ளார்.
கிஷோர் அபூர்வம்
நட்சத்திர 'ஸ்பின்னர்' சாய் கிஷோரை துவக்கத்தில் பந்துவீச அழைக்காமல் அதிர்ச்சி அளித்தார் குஜராத் கேப்டன் சுப்மன் கில். கடைசி ஓவரை தான் கொடுத்தார். இது கிஷோரின் முதல் ஓவர் ஆனது. இதில் அஷுதோஷை வெளியேற்றி 9 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார்.
பிரிமியர் அரங்கின் முதல் இன்னிங்சில் கடைசி ஓவரை, தனது முதல் ஓவராக வீசிய மூன்றாவது 'ஸ்பின்னர்' ஆனார் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர். இதற்கு முன் 2009ல் மும்பையின் ஜெயசூர்யா (எதிர்-ராஜஸ்தான்), 2010ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா (எதிர்-மும்பை) இதுபோல பந்து வீசினர்.