தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சரிந்தது சென்னை அணி 'பேட்டிங்' * முதல் போட்டியில் தோல்வி

சரிந்தது சென்னை அணி 'பேட்டிங்' * முதல் போட்டியில் தோல்வி

சரிந்தது சென்னை அணி 'பேட்டிங்' * முதல் போட்டியில் தோல்வி


ADDED : மார் 30, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவுகாத்தி: தோனி இடம் பெறாத சென்னை அணியால் கரை சேர முடியவில்லை. தனது முதல் லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, ராஜஸ்தான் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் 'சீனியர்' தோனி, கால் தசை பிடிப்பு காரணமாக ஓய்வில் உள்ளதால் பங்கேற்கவில்லை. இவருக்குப் பதில் ரூ. 14.2 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா அறிமுகனார்.

சாம்சன் ஏமாற்றம்

சென்னை அணியின் 'டாப்-ஆர்டர்' வேகமாக சரிந்தது. கேப்டன் ருதுராஜ், புது வரவு சஞ்சு சாம்சன் சுமார் துவக்கம் தந்தனர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், சென்னை அணிக்காக முதல் பவுண்டரி அடித்தார் சாம்சன். இரண்டாவது ஓவரை பர்கர் வீசினார். 6 ரன் மட்டும் எடுத்த சாம்சன், கடைசி பந்தில் போல்டானார். ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரில் பவுண்டரி அடித்த ருதுராஜ் (6), கடைசி பந்தில் போல்டாக, சென்னை ரசிகர்கள் 'ஷாக்' ஆகினர்.

இந்தியாவுக்கு ஜூனியர் உலக கோப்பை வென்று தந்த ஆயுஷ் மாத்ரே, முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். 'இம்பேக்ட்' வீரராக களமிறங்கினார் சர்பராஸ் கான். பர்கர் ஓவரில் (4வது) 4 வது பந்தில் பவுண்டரி அடித்த சர்பராஸ், 5வது பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் விளாசினார். மாத்யூ ஷார்ட் (2) நிலைக்கவில்லை. கார்த்திக் சர்மா வந்த வேகத்தில் பிஷ்னோய் பந்தில் ஒரு சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார்.

ஜடேஜா 'இரண்டு'

மறுபக்கம் ஜடேஜா, தனது முதல் ஓவரில் மிரட்டினார். 2வது பந்தில் சர்பராஸ் (17) எல்.பி.டபிள்யு., ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபேவை (6) கடைசி பந்தில் அவுட்டாக்கினார். சென்னை அணி 9 ஓவரில் 62/6 ரன் என, தத்தளித்தது.

சிறிது நேரத்தில் கார்த்திக் சர்மா (18), பிரிஜேஷ் சர்மா பந்தில் அவுட்டானார். சென்னை அணி 82/8 என ஆனது. மாட் ஹென்றி 5 ரன் எடுத்தார். கடைசி நேரத்தில் அனுபவ ஓவர்டன், சற்று கைகொடுக்க, சென்னை அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. ஓவர்டன் 43 ரன்னில் அவுட்டாக, சென்னை அணி 19.4 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வைபவ் விளாசல்

எளிய இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், 15 வயது வைபவ் சூர்யவன்ஷி சூப்பர் துவக்கம் தந்தனர். ஹென்றி வீசிய முதல் ஓவரில் 3, 4வது பந்தில் பவுண்டரி, சிக்சர் அடித்து ரன் கணக்கை துவக்கினார் வைபவ். கம்போஜ் வீசிய 5வது ஓவரில் இவர், 4, 4, 6 என விளாச, ராஜஸ்தான் அணி 5 ஓவரில் 55/0 ரன் குவித்தது.

தொடர்ந்து மிரட்டிய வைபவ், நுார் அகமது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடிக்க, 15வது பந்தில் அரைசதம் எட்டினார். வைபவ், 52 ரன்னில் (17 பந்து), கம்போஜ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த துருவ் ஜுரலையும் (18), கம்போஜ் வெளியேற்றினார். ஹென்றி பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு சிக்சர் அடிக்க, வெற்றி எளிதானது. ராஜஸ்தான் அணி 12.1 ஓவரில் 128/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் (38), பராக் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

சாம்சனும் ஜடேஜாவும்...

வீரர்கள் 'டிரேடிங்' முறையில், சென்னை அணியில் இருந்த ரவிந்திர ஜடேஜா, ராஜஸ்தானுக்கு சென்றார். ராஜஸ்தானில் இருந்த சாம்சன், சென்னை அணியில் இணைந்தார். நேற்று சாம்சன் 6 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றினார். 'சுழலில்' மிரட்டிய ஜடேஜா, ஒரே ஓவரில் சர்பராஸ், துபேவை வெளியேற்றி அசத்தினார்.

முதன் முறை

சென்னை அணி கடந்த 2008 முதல் பங்கேற்ற 16 சீசனிலும், முதல் போட்டியில் தோனி பங்கேற்றார். நேற்று முதன் முறையாக இவர் இல்லாமல் களமிறங்கியது சென்னை.

* சென்னை அணி இதுவரை பங்கேற்ற 277 போட்டிகளில், தோனி அல்லது ரெய்னா என யாராவது ஒருவர் இடம் பெற்றனர். முதன் முறையாக நேற்று, இருவரும் இல்லாமல் சென்னை அணி களமிறங்கியது.

* தோனி இல்லாமல் சென்னை அணி, 6வது போட்டியில் நேற்று விளையாடியது. கடைசியாக 2019ல் மும்பைக்கு எதிராக தோனி விளையாடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us