ADDED : ஆக 21, 2024 10:51 PM

புதுடில்லி: ஐ.சி.சி.,யின் புதிய சேர்மனாக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக, 2020 முதல் கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது இரண்டாவது கட்ட பதவிக்காலம், வரும் நவம்பர் மாதம் முடிகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருந்தது.
எனினும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா, புதிய சேர்மனாக முயற்சிப்பதாக செய்தி வெளியாகின. இவருக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து தொடர்ந்து சேர்மன் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என பார்கிலே தெரிவித்துள்ளார்.
தேர்வு எப்படி
சேர்மன் பதவிக்கு 16 ஓட்டுகள் உள்ளன. இதில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை என்ற பழைய விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதன் படி 51 சதவீதம் (9 ஓட்டு) இருந்தால் போதுமானது. இதனால் ஜெய் ஷா எளிதாக தேர்வு செய்யப்படலாம்.
இதுகுறித்து ஐ.சி.சி., தரப்பில் வெளியான செய்தியில்,' சேர்மன் தேர்தலுக்கு ஆக. 27க்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், வரும் டிச. 1ல் தேர்தல் நடக்கும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ஜெய் ஷா 35, தேர்வு செய்யப்பட்டால், ஐ.சி.சி.,யின் இளம் சேர்மன் என வரலாறு படைக்கலாம். இதற்கு முன் இந்தியா சார்பில் ஜக்மோகன் டால்மியா (1997-2000), சரத் பவார் (2010-12), சீனிவாசன் (2014-15), சஷாங்க் மனோகர் (2015-2020) என 4 பேர் இப்பதவியில் இருந்தனர்.