சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேக்ஸ்வெல் ‘குட்–பை’
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேக்ஸ்வெல் ‘குட்–பை’
ADDED : நவ 04, 2026 03:20 PM

சிட்னி: சர்வதேச ‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலிய அணி ‘ஆல் ரவுண்டர்’ கிளன் மேக்ஸ்வெல், 38. கடந்த 2012, ஆக. 25 ல் (எதிர்: ஆப்கன்) சர்வதேச கிரிக்கெட்டில் (ஒருநாள்) அறிமுகம் ஆனார். 7 டெஸ்ட் (339 ரன், ஒரு சதம், 8 விக்கெட்), 149 ஒருநாள் (3990 ரன், 4 சதம், சராசரி 33.81, ‘ஸ்டிரைக் ரேட்’ 126.70, 77 விக்கெட்), 130 சர்வதேச ‘டி–20’ல் (2897 ரன், 5 சதம், சராசரி 39.49, ‘ஸ்டிரைக் ரேட்’ 154.42, 51 விக்கெட்) விளையாடி உள்ளார்.
இரண்டு முறை (2015, 2023) 50 ஓவர், ஒரு முறை (2021) ‘டி–20’ உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார்.
கடந்த 2023 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 91/7 ரன் எடுத்து திணறியது. அப்போது களமிறங்கிய மேக்ஸ்வெல், 128 பந்தில் 201 ரன் குவித்து அணியை மீட்டார். பின், ஒருநாள் அரங்கில் இருந்து விடைபெற்றார் (2025, ஜூன் 2).
தற்போது சர்வதேச ‘டி–20’, முதல் தர கிரிக்கெட், ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். இருப்பினும், ‘பிக்பாஷ்’ உள்ளூர் ‘டி–20’ தொடரில், மெல்போர்ன் அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளார். இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறியது:
‘டி–20’ உலக கோப்பை தொடருக்குப் பின் ஓய்வு குறித்து யோசித்தேன். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், கடைசி போட்டியில் பங்கேற்ற பின் ஓய்வு பெறலாம் என நம்பிக்கை இருந்தது.
ஆனால், 2028 ஒலிம்பிக் போட்டிக்காக, அடுத்த 12 முதல் 24 மாதங்களில் அணியில் பல மாற்றங்கள் வரலாம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.
இதனால், மீதமுள்ள சில உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட, எனது உடல்நலத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
